முருகன் கோவிலுக்கு வந்தவர்கள் செல்போன்களை திருடியவர் கைது
சிசிடிவி கேமராவில் அடையாளம் காணப்பட்ட திருடன்;
செல்போன் திருடியவர் கைது
வசித்துார் மாவட்டம் நாகலாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவர் திருத்தணி முருகன் கோவிலுக்கு வந்ததுடன், திருத்தணி நகராட்சி அலுவலகம் எதிரே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்கினார். அதே போல் சென்னை தி.நகரைச் சேர்ந்த குமரேசன் என்பவரும் கோவிலுக்கு வந்து, இரவில் சென்னைக்கு பேருந்து இல்லாததால் தனியார் மண்டபத்தில் தங்கியிருந்தார்.
இருவரும் செல்போன்களை சட்டை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு துாங்கினர். அதிகாலை 3:30 மணிக்கு எழுந்து பார்த்த போது, இருவரின் செல்போன்கள் மர்ம நபர்களால் திருடப்பட்டன. இது குறித்து இருவரும் திருத்தணி போலீசில் புகார் கொடுத்தனர். புகாரின்படி திருத்தணி எஸ்.ஐ., ராக்கிகுமாரி வழக்கு பதிந்து, தனியார் மண்டபத்தில் பதிவாகியிருந்த 'சிசிடிவி' கேமரா மூலம் கண்காணித்தனர்.
அதில் செல்போன்களை திருடியது திருத்தணியைச் சேர்ந்த தரண் சாய் என்பது தெரியவந்தது. உடனடியாக அவரை கைது செய்த போலீசார் செல்போனை பறிமுதல் செய்தனர்.