வங்கியில் போட வேண்டிய ரூ. 28 லட்சத்துடன் தப்பிய கார் டிரைவர்
பணத்துடன் காரில் தப்பி சென்ற கார் டிரைவர் - போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-02-13 10:53 GMT
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டாறு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் பிள்ளை (72) இவர் பல சரக்கு மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம் கடந்த இரண்டு ஆண்டுகளாக ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதி கதிரவன் (30) என்பவர் டிரைவராக வேலை பார்த்து வந்தார். நேற்று காலை ஆறுமுகம் பிள்ளை தனக்கு சொந்தமான பணம் ரூபாய் 28 லட்சத்தை வங்கியில் செலுத்துவதற்காக தனது அலுவலக ஊழியர் ராமதாஸ் இடம் தெரிவித்தார். இதை அடுத்து ராமதாஸ் கதிரவனை அழைத்துக்கொண்டு காரில் வங்கிக்கு சென்றார். வங்கி அருகே ராமதாஸ் இறங்கியதும், காரை பார்க்கிங் செய்துவிட்டு பணத்தை எடுத்து வருவதாக கூறி சென்ற கதிரவன் பணத்துடன் காரில் தப்பி சென்றார். இது குறித்து ராமதாஸ் ஆறுமுகம் பிள்ளைக்கு தகவல் தெரிவித்தார். அவர் கோட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதில் கார் ராமன்புதூர் அருகே மீட்கப்பட்டது. காரை நிறுத்திவிட்டு பணத்துடன் கதிரவன் ஆட்டோவில் செல்லும் காட்சிகள் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தன. அந்த ஆட்டோவை கண்டுபிடித்து விசாரித்த போது, கதிரவன் கடைசியாக தக்கலை பஸ் நிலையத்தில் இறங்கியது தெரிய வந்தது. அவர் பணத்துடன் கேரளா தப்பி சென்றிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. கதிரவன் தப்பி செல்லும்போது தனது செல்போனை ராமன் புதூர் பகுதியில் வைத்து உடைத்துள்ளார். தனிப்படை போலீசார் கேரளாவில் விரைந்துள்ளனர். அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்திற்கு விசாரணைக்காக சென்று உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.