ரூ.2 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் -3 பேர் கைது
Update: 2023-11-10 03:36 GMT
விழுப்புரம் தந்தை பெரியார் நகர் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய்க்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் சிறப்பு தனிப்படை போலீசார், அப்பகுதிக்கு விரைந்து சென்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு முருகையன் மகன் அஜித் (வயது 23) என்பவர் வீட்டில் சந்தேகத்தின்பேரில் போலீசார் சோதனை மேற்கொண்டதில் அந்த வீட்டினுள் 7 சாக்கு மூட்டைகளில் தடை செய்யப் பட்ட புகையிலை பொருட்கள் பாக்கெட், பாக்கெட்டுகளாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை போலீசார் கைப்பற்றி எடை போட்டு பார்த்ததில் 83 கிலோ இருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக அஜித்தை போலீசார் மடக்கிப்பி டித்து விசாரித்ததில் அவரும், அவரது நண்பர்களான விழுப்புரம் அன்னை இந்திரா நகரை சேர்ந்த திரிசங்கு மகன் திவாகரன் (27), விழுப்புரம் விராட்டிக்குப்பம் சாலை ராஜகோபால் நகர் பகுதியை சேர்ந்த அய்யப்பன் மகன் வேலு (21) ஆகியோரும் சேர்ந்து செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கத்தில் இருந்து புகையிலை பொருட்களை மொத்தமாக வாங்கி வந்து பதுக்கி வைத்து விழுப்புரம் பகுதியில் உள்ள கடைகளுக்கு சப்ளை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அஜித், திவாகரன், வேலு ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களையும், 10 கிராம் கஞ்சா பொட்டலத்தையும் மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்ய பயன்படுத்திய ஒரு ஸ்கூட்டர், ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.