டோக்கன் விநியோகம்: வீடுகளுக்கு செல்லாத ஊழியர்களால் சலசலப்பு.
பெருங்களத்துாரில் நிவாரண தொகைக்கான டோக்கனை, ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று வழங்காமல், கடையிலேயே வழங்கியதால், கூட்டம் அலைமோதியது.
தாம்பரம், பெருங்களத்துாரில், நிவாரண தொகைக்கான டோக்கனை, ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று வழங்காமல், கடையிலேயே வழங்கியதால், ஒவ்வொரு இடத்திலும் நுாற்றுக்கணக்கான மக்கள் குவித்தனர். இதனால், தள்ளு முள்ளு போன்ற பிரச்னை ஏற்பட்டது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா, 6,000 ரூபாய் நிவாரண தொகை வழங்கப்படும் என, அரசு அறிவித்துள்ளது. இதற்கான டோக்கனை, ரேஷன் கடை ஊழியர்கள், கார்டு தாரர்களின் வீடுகளுக்கு சென்று வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தாசில்தார்களுக்கு, இது தொடர்பாக, மாவட்ட நிர்வாகம் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளது. அப்படியிருந்தும், அதை பின்பற்றாமல், பெருங்களத்துார், தாம்பரம், அஸ்தினாபுரம், பொழிச்சலுார் பகுதிகளில், காலை, கடைகளில் வைத்தே டோக்கன் வழங்கப்பட்டது. பெருங்களத்துாரில் நாகத்தம்மன் கோவில் அருகேயுள்ள மூன்று ரேஷன் கடை ஊழியர்கள், வீடுகளுக்கு சென்று டோக்கன் வழங்காமல், கடைகளிலேயே வைத்து வழங்கினர். இந்த விவரம் தெரிந்து, ஒவ்வொரு கடையிலும், நுாற்றுக்கணக்கான மக்கள் குவிந்தனர்.
ஊழியர்களின் இச்செயலலை சிலர் தட்டி கேட்டதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேற்கு தாம்பரம், சி.டி.ஓ., காலனி, மூன்றாவது தெரவில் உள்ள ரேஷன் கடையில் டோக்கன் வழங்கப்பட்டதால், ஏராளமானோர் நீண்ட துாரம் வரிசையில் காத்திருந்தனர். தாம்பரம் தாசில்தாருக்கு புகார் தெரிவித்தும், பெரியதாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பொழிச்சலுார், லட்சுமி நகரிலும் கடையிலேயே வைத்து டோக்கன் வழங்கப்பட்டதோடு, ஊழியர்கள் வைத்திருந்த பட்டியலில் பலரது பெயர் இல்லாததால், அங்கு சலசலப்பு ஏற்பட்டது. வருவாய் துறையினர் தலையிட்டு, வீடு வீடாக டோக்கன் வழங்க ஊழியர்களை அறிவுறுத்தினர்.