சூறைக்காற்றுடன் மழை - மரம் விழுந்து மின் கம்பங்கள் சேதம்.
திருவட்டார் சுற்றுவட்டார பகுதியில் சூறைக்காற்றுடன் பெய்த மழையில் மரம் சாய்ந்து மின் கம்பியின் மீது விழுந்ததால் மின் கம்பங்கள் சேதமடைந்து மின் தடை ஏற்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இந்நிலையில், திருவட்டாரில் இருந்து கேசவபுரம் செல்லும் ரோட்டில் பாறையடி பகுதியில் தனியார் ஒருவருக்கு சொந்தமான அயனி மரம் முறிந்து ரோட்டின் குறுக்கே விழுந்ததில், உயர் அழுத்த மின் கம்பி அறந்து விழுந்து மின் கம்பமும் சேதம் அடைந்ததால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இது குறித்து அப்பகுதி மக்கள் மின்வாரியத்திற்கு தகவல் தெரிவித்ததன் பேரில் மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் மரக் கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். பின்னர் அறுந்து விழுந்த மின் கம்பிகளை சீரமைக்கும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர். மின்கம்பி மீது மரம் முறிந்து விழுந்ததால் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.