ஊட்டியில் சுற்றுப் பேருந்து சேவை துவக்கம் !
கோடை சீசனையொட்டி ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் குறைந்த கட்டணத்தில் சுற்றுலா மையங்களை கண்டு ரசிக்க சிறப்பு சுற்று பேருந்து சேவையை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் இன்று துவக்கி வைத்தார்.
By : King 24x7 Angel
Update: 2024-03-09 10:31 GMT
ஆண்டு தோறும் நீலகிரி மாவட்டத்தில் ஏப்ரல்,மே மாதங்களில் கோடை சீஸன் களைகட்டும்.இந்த இரண்டு மாதங்களில் லட்சக் கணக்கான சுற்றுலாப் பயணிகள் நீலகிரி மாவட்டத்திற்கு வந்து செல்வார்கள். இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் அனைத்து சுற்றுலா தலங்களையும் குறைந்த பயணக் கட்டணத்தில் கண்டு ரசிக்கும் வகையில் போக்குவரத்து கழகம் சார்பில் ஊட்டி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் சிறப்பு சுற்று பேருந்து சேவை தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா, தேயிலை பூங்கா, தேயிலை அருங்காட்சியகம், படகு இல்லம் ஆகிய சுற்றுலா மையங்களுக்கு இயக்கப்படுகிறது. இந்நிலையில் இன்று முதல் ஏப்ரல் மாதம் வரை சுற்றுலா தளங்களுக்கு இயக்கப்படும் சுற்று பேருந்து சேவையை தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் இன்று துவக்கி வைத்தார். இந்த சுற்று பேருந்தில் பயணிப்பவர்களுக்கு பெரியவர்களுக்கு ரூ.100 சிறியவர்களுக்கு ரூ. 50 கட்டணமாக வசூலிக்கப்படும் இந்த சுற்று பேருந்து சேவையில் பயணிப்போர் ஒரு முறை பயண சீட்டு எடுத்து, அன்றைய நாள் முழுவதும் அவரவர் நேரத்திற்கேற்ப சுற்றுலா மையங்களை பார்வையிட்டு, பயணித்து கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். சிறப்பு சுற்று பேருந்து சேவை, பயணிகளின் வரத்திற்கு ஏற்ப கூடுதலாக இயக்க போக்குவரத்து கழகம் ஏற்பாடுகளை செய்துள்ளது. இந்த சேவை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை இயக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஊட்டியில் இருந்து குன்னூருக்கு, லவ்டேல் - கெடாநெல்லி - அருவங்காடு வழியாக புதிய வழித்தடத்தில் பேருந்துகள் சேவையையும் இன்று அமைச்சர் துவக்கி வைத்தார்.