சுற்றுலா பயணிகளின் ஆபத்தான குளியல் - நடவடிக்கை எடுக்க கோரிக்கை.
திற்பரப்பு அணை பகுதியில் ஆபத்தான முறையில் குளிக்கும் சுற்றுலா பயணிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோடை வெயிலின் தாக்கம் காரணமாக, குமரி மாவட்ட நீர் நிலைகளில் தண்ணீர் வரத்து குறைந்து காணப்படுகிறது. கோதையாற்றில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளதால், திற்பரப்பு அருவியிலும் தண்ணீர் வரத்து குறைந்து காணப்படுகிறது. கோடை விடுமுறை காரணமாக தற்போது சுற்றுலா பயணிகள்வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அருவியில் விரும்பும் விதமாககுளிக்க முடியாததால் சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் அருவியின் மேற் பகுதியிலுள்ள அணை பகுதிக்கு வருகின்றனர்.
ஆற்றில் தண்ணீர் சிறுதளவே பாய்வதால், அணையில் தேங்கி நிற்கும் தண்ணீரில் குளிக்கின்றனர். அணையின் உள்ள பகுதியில் ஆபத்தான பாறைகள் உள்ளன. தண்ணீரின் உட்பகுதியில் சீரற்ற முறையில் காணப்படும் பாறைகள் ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் இப்பகுதியில் குளிப்பது ஆபத்தை உருவக்கும். பெரும் சேதம் ஏற்படும் முன் சம்பந்தப்பட்டவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.