ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்
தொடர் விடுமுறையையொட்டி ஏற்காட்டில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் நிலவும் குளு,குளு சீசனை அனுபவிக்க தமிழத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். ஆண்டு தோறுமே இங்கு குளுகுளு சீசன் நிலவினாலும் ஏப்ரல் , மே மாதங்களில் நிலவும் சீசனை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படும்.
இந்த நிலையில் தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களிலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படும். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக பெய்த மழை பொழிவின் காரணமாக ஏற்காடு மலைப்பகுதி பசுமையாக காணப்படுகிறது. மேலும் மாலை மற்றும் இரவு, காலை நேரத்தில் தற்போது கடுங்குளிர், பனிப்பொழிவும் அதிகளவில் உள்ளது. இதற்கிடையே தற்போது தமிழகத்தில் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டதால் ஏராளமான பேர் குடும்பம், குடும்பமாக ஏற்காட்டிற்கு சுற்றுலாவுக்கு வந்தனர். மேலும் கிறிஸ்துமஸ் அன்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. மேலும் இன்று இரவு புத்தாண்டு பிறப்பதால் தற்போது வழக்கத்தை விட சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.