கன்னியாகுமரியில் ஆபத்தை உணராமல் அத்துமீறும் சுற்றுலா பயணிகள்

கன்னியாகுமரியில் ஆபத்தை உணராமல் அத்துமீறும் சுற்றுலா பயணிகளை போலீசார் கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.

Update: 2024-01-05 16:32 GMT
கன்னியாகுமரியில் ஆபத்தான இடத்தில் இளைஞர்கள்

கன்னியாகுமரியில்  சீசன் காலமான தற்போது சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாகவே உள்ளது.  சுற்றுலாவை ஆனந்தமாக கொண்டாடும் நோக்கத்தில் கன்னியாகுமரிக்கு வருபவர்களில் சிலர் ஆபத்தை உணராமல் செயல்படுவது தான் அதிர்ச்சிகரமான விஷயமாக உள்ளது.       

கன்னியாகுமரி கடலில் அவ்வப்போது ராட்சத அலைகள் எழும். காற்றின் வேகமும் அதிகமாகும். இதனால் கடற்கரையை ஒட்டி கடல் நடுவே உள்ள ஆபத்தான பாறைகளுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த பாறைகளுக்கு யாரும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 

ஆனால் அதனை மீறி சிலர் அங்கு சென்று விடுகிறார்கள். அவ்வாறு தடையை மீறி செல்பவர்கள் பாறைகளில் அமர்ந்தும், நின்று கொண்டும் செல்போனில் செல்பி எடுக்கின்றனர். மேலும் சிலர் குரூப்பாக நின்று போட்டோ எடுக்கிறார்கள். அவர்கள் பாறைகளுக்கு செல்லும் வழியும், பாறைகள் மீது நிற்பதும் ஆபத்தானது என போலீசார் எச்சரித்துள்ள போதிலும் பலர் கண்டு கொள்வதில்லை.       தற்போது கன்னியாகுமரி கடல் பகுதியில் காற்று அதிகமாக அடித்து வரும் நிலையிலும் இளங்கன்று பயமறியாது என்பதற்கேற்ப, இளைஞர்கள் பலரும் ஆபத்தான பகுதிகளுக்கு சர்வசாதாரணமாக சென்று வருகின்றனர்.

அதனை தடுக்க அந்த பகுதிகளில் கூடுதல் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டு கண்காணிப்பை தீவிரப் படுத்த வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags:    

Similar News