தூத்துக்குடியில் ஆட்சியர் அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகை

வியாபாரிகளுக்கு நிவாரணமாக 50,000 மற்றும் தொழில் செய்ய வட்டியில்லா கடன் வழங்கப்படாததை கண்டித்து வியாபாரிகள் ஆட்சியரகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2024-01-30 13:45 GMT

ஆட்சியரகத்தை முற்றுகையிட்ட வியாபாரிகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் 17 18 தேதிகளில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் காரணமாக மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர்.

இதில் குறிப்பாக ஆத்தூர் பகுதி மற்றும் முக்காணி பகுதிகளில் கடைகளை மழை வெள்ளம் சூழ்ந்ததால் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டு தாங்கள் தொழில் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இதனால் பாதிக்கப்பட்ட தெற்கு ஆத்தூர் வடக்கு ஆத்தூர் முக்காணி பகுதிகளை சேர்ந்த சுமார் 600க்கும் மேற்பட்ட வியாபாரிகளுக்கு தமிழக அரசு நிவாரணமாக ரூபாய் 50 ஆயிரம் வழங்க வேண்டும் மேலும் கூட்டுறவு வங்கி உள்ளிட்ட அரசுடைமை வங்கிகளில் வட்டியில்லா கடன் ரூபாய் ஒரு லட்சம் முதல் 10 லட்சம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி கடந்த 5ஆம் தேதி கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது வியாபாரிகளுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளப்பட்டு உடனடியாக கடன் மற்றும் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்தனர்.

ஆனால் இதுவரை வியாபாரிகளுக்கு மழைக்கால நிவாரணமாக ரூபாய் 50,000 மற்றும் வட்டியில்லா கடன் வழங்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட தெற்கு ஆத்தூர் வடக்கு ஆத்தூர் முக்காணி பகுதியை சேர்ந்த வியாபாரிகள் நூற்றுக்கு மேற்பட்டோர் இன்று கடைகளை அடைத்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

மாவட்ட ஆட்சித் தலைவர் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு தொழில் நஷ்டத்தில் இருக்கும் வியாபாரிகளுக்கு உடனடியாக நிவாரண உதவி மற்றும் வட்டியில்லா கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க விட்டால் வரும் திங்கட்கிழமை தெற்கு ஆத்தூர் வடக்கு ஆத்தூர் முக்காணி பகுதியை சேர்ந்த வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் மற்றும் தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்

Tags:    

Similar News