போக்குவரத்து விதிமீறல் - சேலம் சரகத்தில் 219 ஓட்டுனர் உரிமம் ரத்து
சேலம் சரகத்தில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 219 பேரின் ஓட்டுனர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என்று வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.;
Update: 2023-11-29 02:05 GMT
ஓட்டுநர் உரிமம் ரத்து
சேலம் சரகத்துக்குட்பட்ட சேலம், தர்மபுரி மாவட்டங்களில் விபத்துகளை குறைக்கும் வகையில் போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு போக்குவரத்து விதிகள் மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதில் அதிவேகமாக மற்றும் மது குடித்துவிட்டு வாகன ஓட்டுதல் உள்பட பல்வேறு விதிகளை மீறுபவர்கள் மீது போக்குவரத்து போலீசாரின் பரிந்துரையின் பேரில் ஓட்டுனர் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து வட்டார போக்குவரத்து அலுவலர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி சேலம் சரகத்தில் கடந்த மாதத்தில் மட்டும் விபத்து ஏற்படுத்திய 30 பேர், அதிவேகமாக வாகன ஓட்டிய 49 பேர், அதிகபாரம் மற்றும் ஆட்கள் ஏற்றி சென்ற 47 பேர், செல்போன் பேசியப்படி வாகனம் ஓட்டிய 48 பேர், மதுகுடித்து வாகன ஓட்டிய 8 பேர், சிவப்பு விளக்கு சிக்னலை மதிக்காமல் வாகனம் ஓட்டி சென்ற 37 பேர். என 219 பேரின் ஓட்டுனர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர். போக்குவரத்து விதிகள் மீறுபவர்கள் மீது இந்த நடவடிக்கை தொடரும் என்றும் அதிகாரிகள் கூறினர்.