சேலத்தில் தண்டவாளத்தில் மது குடித்தபோது பரிதாபம்: தொழிலாளி பலி
சேலத்தில் தண்டவாளத்தில் மது குடித்தபோது ரயிலில் அடிபட்டு தொழிலாளி பலியானர்.
சேலம் சத்திரம் ரெயில் நிலையத்தில் இருந்து முள்ளுவாடி கேட் செல்லும் வழியில் ரெயில்வே தண்டவாளம் உள்ளது. இந்த வழித்தடத்தில் நேற்று இரவு 7 மணியளவில் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இருந்து விருத்தாசலம் நோக்கி பயணிகள் ரயில் சென்றது.
அப்போது, பெரியார் மேம்பாலம் பகுதியில் இருந்து சத்திரம் நோக்கி 200 அடி தூரத்தில் 2 பேர் தண்டவாளத்தில் அமர்ந்து மது குடித்து கொண்டிருந்தனர். அப்போது சத்திரத்தில் இருந்து டவுன் ரெயில் நிலையம் நோக்கி வேகமாக வந்த ரெயில் அவர்கள் மீது மோதியது. இதை சற்று எதிர்பார்க்காத அவர்கள் இருவரும் ரெயிலில் அடிபட்டு தூக்கி வீசப்பட்டனர்.
இதில் ஒருவர் கை துண்டாகியும், உடல் நசுங்கியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் ஒன்றாக அமர்ந்து மது குடித்த அவரது நண்பர் படுகாயத்துடன் உயிர் தப்பினார். அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த சேலம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் படுகாயம் அடைந்தவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இறந்தவர் யார்? அவர் எந்த பகுதியை சேர்ந்தவர்? அவருடன் ஒன்றாக சேர்ந்து மது குடித்து படுகாயம் அடைந்தவர் யார்? என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை.
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் இறந்து போனவர் குகை அம்பேத்கர் நகரை சேர்ந்த கூலித்தொழிலாளியான உதயகுமார் (வயது 35) என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.