வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி முகாம்

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி முகாம் - கலெக்டர் பிருந்தாதேவி ஆய்வு நடத்தினார்.

Update: 2024-03-25 01:27 GMT

கலெக்டர் பிருந்தாதேவி ஆய்வு

நாடாளுமன்ற தேர்தலையொட்டி சேலம் மாவட்டத்தில் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களுக்கான முதல் கட்ட பயிற்சி நடைபெற்று வருகிறது. அதன்படி சிக்கனம்பட்டியில் உள்ள ஒரு தனியார் கலை கல்லூரியில் நடைபெற்ற பயிற்சியை கலெக்டர் பிருந்தாதேவி நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.

அப்போது அவர் கூறியதாவது:- நாடாளுமன்ற தேர்தலையொட்டி மாவட்டத்தில் 3,260 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளன. வாக்குச்சாவடி மையங்களில் 13 ஆயிரத்து 410 அலுவலர்கள் மற்றும் கூடுதலாக மாற்று அலுவலர்கள் 2,682 பேர் என மொத்தம் 16 ஆயிரத்து 92 அலுவலர்கள் வாக்குச்சாவடி மையங்களில் பணி புரிய உள்ளனர். சேலம் மாவட்டத்தில் கெங்கவல்லி, ஆத்தூர், ஏற்காடு, ஓமலூர் உள்ளிட்ட 11 மையங்களில் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி நடைபெற்று வருகிறது. அதன்படி பயிற்சி மையங்களில் ஒன்றான சிக்கனம்பட்டி தனியார் கலை கல்லூரியில் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பயிற்சி குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.

மேலும் அங்கு பயிற்சியாளர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மருத்துவ குழுக்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களுக்காக அமைக்கப்பட்டிருந்த மாதிரி வாக்குப்பதிவு மையம் ஆகியவற்றை ஆய்வு நடத்தி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து, மேச்சேரி, சங்ககிரி, வீரபாண்டி, அயோத்தியாப்பட்டணம், ஆத்தூர், தலைவாசல் ஆகிய இடங்களில் நடைபெற்ற பயிற்சி வகுப்புகளை கலெக்டர் பிருந்தாதேவி நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.

Tags:    

Similar News