தேர்தல் பணிகள் குறித்து பயிற்சி வகுப்பு
விருதுநகர் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான ஜெயசீலன் தலைமையில் தேர்தல் பணிகள் குறித்து பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்களவை பொதுத்தேர்தல்-2024 முன்னிட்டு, மாவட்டத்தில் மண்டல அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ள அலுவலர்களுக்கு தேர்தல் பணிகள் குறித்து பயிற்சி வகுப்பு மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. இந்த பயிற்சி வகுப்பில் மண்டல அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய உடனடி பணிகள், வாக்குச்சாவடி பணிகள், தேர்தல் தொடர்பாக வாக்காளர் விழிப்புணர்வு பணிகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்காளர் சரிபார்ப்பு காகித தணிக்கை இயந்திரங்கள் கையாளுதல், வாக்குச்சாவடி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள், வாக்குப்பதிவு முடிவுற்றதும் செய்ய வேண்டிய பணிகள், தேர்தல் பணிகளில் உள்ள முக்கியமான படிவங்கள் மற்றும் சான்றிதழ்களை கையாளுதல் உள்ளிட்டவை குறித்து பயிற்சியளிக்கப்பட்டது.
இப்பயிற்சி வகுப்பில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவிக்கையில் மண்டல அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வாக்குச்சாவடிகளை பார்வையிட்டு, வாக்குச்சாவடிகளுக்கு செல்லக்கூடிய வழிகள் மற்றும் மாற்று வழிகள் தெரிந்து கொள்ள வேண்டும். வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்து குறைகள் இருப்பின் அவற்றினை சரிசெய்யும் பொருட்டு, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தெரிவித்து சரிசெய்யப்பட வேண்டும். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சாய்தளம் அமைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும். வாக்குச்சாவடி பகுதிகளில் கட்சி கொடிகள், பதாகைகள் மற்றும் சுவரொட்டிகள் இருப்பின் அவற்றினை அகற்றுவதற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு வழங்கப்படும் பயிற்சியின் போது மண்டல அலுவலர்கள் தகுந்த பயிற்சியினை அளித்திட வேண்டும்.வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாளுதல் குறித்து வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு தெளிவாக தெரிவிக்கப்பட வேண்டும். தேர்தல் நாளுக்கு முந்தைய தினம் வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் எடுத்துச் செல்லப்படும் படிவங்கள் மற்றும் தேர்தல் நாளன்று பயன்படுத்தப்படும் பொருட்கள் எண்ணிக்கையினை விடுபடாமல் எடுத்துச் செல்லப்பட வேண்டும். சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடிக்கு ஒதுக்கப்பட்ட, வாக்குப்பதிவு இயந்திரமா என்பதை சரிபார்த்து வாக்குச்சாவடி அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும். வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடி அலுவலர்களின் பணிகள் குறித்து தெளிவாக தெரிவிக்கப்பட வேண்டும்.
வாக்குப்பதிவு நாளில் வாக்குச்சாவடிகளில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏதேனும் ஏற்படின் உடனடியாக தேர்தல் நடத்தும் அலுவலருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.மேலும் அவ்வப்போது தேர்தல் நடத்தும் அலுவலர், தலைமை தேர்தல் அலுவலர் அவர்களால் வழங்கப்படும் அறிவுரைகளின் படி செயல்பட வேண்டும். மண்டல அலுவலர்கள் அவர்களுக்கான பணிகளின் விவரங்களை நன்கு தெரிந்து கொண்டு, வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களுக்கு போதிய ஆலோசனைகள் வழங்கி, 100 சதவிகிதம் சரியான முறையில் தவறுகள் ஏதும் இன்றி தேர்தல் நடத்திட உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ஜெயசீலன் தெரிவித்தார்.