சேலத்தில் திருநங்கை தூக்கிட்டு தற்கொலை
சேலத்தில் திருநங்கை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம் ரத்தினசாமிபுரம் முதல் கிராஸ் வையாபுரிகாடு பகுதியை சேர்ந்தவர் சபரி என்ற இளமதி (வயது 28). திருநங்கையான இவர், அன்னதானப்பட்டியில் இருந்து கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ரத்தினசாமிபுரம் பகுதிக்கு குடிவந்தார். நேற்று முன்தினம் அவரது நண்பர்கள் இளமதியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது அவர் எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் இளமதி வீட்டிற்கு சென்று ஜன்னல் வழியாக பார்த்தனர்.
அப்போது, திருநங்கை இளமதி தனது சுடிதார் துப்பட்டாவில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுபற்றி செவ்வாய்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தற்கொலை செய்து கொண்ட திருநங்கையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். குடும்ப பிரச்சினையில் இளமதி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.