ராமநாதபுரத்தில் இருந்து குப்பை வண்டியில் சென்னைக்கு பயணம்
ராமநாதபுரத்தில் இருந்து புயல் நிவாரண பணிகளுக்கு குப்பை வண்டியில் சென்னைக்கு அழைத்து சென்றதால் துப்புரவு பணியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
மிக்ஜாம் புயல் சென்னையை புரட்டி போட்ட நிலையில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள தமிழக முழுவதும் இருந்து துப்புரவு பணியாளர்கள் சென்னைக்கு சென்று தூய்மை பணிகளில் ஈடுபட உள்ளனர்.
இதனை அடுத்து ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சியில் இருந்து ஒரு தூய்மை பணியாளர் தலைமையில் 15 துப்புரவு பணியாளர்கள் இன்று சென்னைக்கு புறப்பட்டு சென்றனர். அப்போது நகராட்சி சார்பில் பேருந்து வசதி செய்து தராததால் குப்பை அள்ளும் வண்டியில் துப்புரவு பணியாளர்கள் அழைத்துச் சென்றதால் பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
சென்னை செல்வதற்கு சுமார் 12 மணி நேரம் ஆகும். சென்னை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தாலும் ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது, அதே சமயத்தில் சென்னையில் மழை பெய்தால் நனைந்து கொண்டே தான் செல்ல முடியும்.
இந்த நிலையில் குப்பை அள்ளும் வண்டியில் எவ்வாறு சென்னை வரை செல்ல முடியும் என துப்புரவு பணியாளர்கள் மனக்குமுறலுடன் கிளம்பி சென்றனர்.