போரூரில் நிழற்குடையின்றி பயணிகள் அவதி
போரூர் மவுன்ட் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மெட்ரோ ரயில் பணிகளுக்காக பயணிகள் நிழற்குடைகள் அகற்றப்பட்டதால் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர் .
ஆற்காடு சாலை மற்றும் போரூர் மவுன்ட் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகின்றன. சாலையில் நடுவே துாண்கள் அமைக்க தடுப்புகள் அமைக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதையடுத்து, போக்குவரத்திற்கு ஏதுவாக, சாலையின் இருபுறம் நிலம் கையகப்படுத்தப்பட்டு, சாலை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
அப்போது, சாலையோரம் இருந்த பல பேருந்து நிழற்குடைகளும் இடிக்கப்பட்டன. இதனால், பயணியர் மிகவும் சிரமப்படுகின்றனர். சில இடங்களில் தற்காலிக கூடாரம் வாயிலாக, பேருந்து நிழற்குடை அமைத்துள்ளனர். ஆனால், அங்கு போதிய இருக்கைகள் இல்லாததால், முதியவர்கள் முதல் குழந்தைகள் வரை கால்கடுக்க நிற்க வேண்டிய நிலை உள்ளது. மாநகராட்சி மற்றும் மெட்ரோ ரயல் நிர்வாகம் இணைந்து இதற்கு தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.