திருச்சி : இன்று வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்
திருச்சி மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்திலும், உதவி தோ்தல் நடத்தும் அலுவலரான திருச்சி கோட்டாட்சியா் அலுவலகத்திலும் வேட்புமனுவை தாக்கல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மக்களவைத் தொகுதிக்கான வேட்பு மனுத்தாக்கலுக்கு திருச்சி மாவட்ட ஆட்சியரகம் அனைத்து நிலைகளிலும் தயாராகவுள்ளது. திருச்சி மக்களவைத் தொகுதிக்கான வேட்பு மனுக்களை திருச்சி மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரான திருச்சி மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்திலும், உதவி தோ்தல் நடத்தும் அலுவலரான திருச்சி கோட்டாட்சியா் அலுவலகத்திலும் தாக்கல் செய்யலாம்.
மனுத் தாக்கலுக்கு வரும் வேட்பாளா்கள் மற்றும் வேட்பாளா்களுடன் வரும் நபா்கள் தோ்தல் நடத்தை விதிமுறைகளை முறையாக பின்பற்றுகின்றனரா என்பதை கண்காணிப்பதற்காக ஆட்சியரகத்தில் ஏற்கெனவே உள்ள கேமராக்களுடன், புதிய கேமராக்களும் பொருத்தப்பட்டு மொத்தம் 20 சிசிடிவி கேமரா கண்காணிப்பில் வேட்பு மனுத்தாக்கல் நடைபெறவுள்ளது. ஆட்சியரகத்தில் மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் மா. பிரதீப்குமாா், கோட்டாட்சியா் அலுவலகத்தில் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் கே. அருள் ஆகியோா் வேட்பு மனுக்களை பெறுகின்றனா்.
மாா்ச் 20ஆம் தேதி தொடங்கி 27ஆம் தேதி வரை மனுத்தாக்கல் செய்யலாம். 28ஆம் தேதி மீது வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். வேட்பு மனுக்களை திரும்பப் பெற மாா்ச் 30ஆம் தேதி கடைசி நாளாகும். வேட்பாளா்களோ, உடன் வரும் கட்சியினரோ நடத்தை விதிமுறைகளை மீறாமல், மனுத்தாக்கல் முறையாக நடைபெற ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான மா. பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா்.