லாரி உரிமையாளர்கள் சங்கம் செயற்குழு கூட்டம் !
மணல் குவாரிகளை அரசு திறக்காவிட்டால் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க முடிவு கலெக்டர் அலுவலகங்கள் முன்பு லாரிகளை நிறுத்தி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம் என தெரிவித்துள்ளனர்.
By : King 24x7 Angel
Update: 2024-03-11 10:42 GMT
சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த மணல் லாரி உரிமையாளர்கள் சங்க செயற்குழு கூட்டம் குரங்குச்சாவடியில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கண்ணையன், பொருளாளர் முருகேசன், மாவட்ட துணை செயலாளர் பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், மணல் லாரி உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தமிழகம் முழுவதும் உடனடியாக மணல் குவாரிகளை திறக்க வேண்டும், கடந்த 6 மாதங்களாக மணல் வழங்காத காரணத்தால் தமிழகம் முழுவதும் ஒரு நாளைக்கு 40 ஆயிரம் யூனிட் தேவைப்படுகிறது. ஆனால் அரசு ஒரு நாளைக்கு 300 யூனிட் மணல் மட்டும் தான் வழங்கி வருகிறது. இதனால் கட்டுமான துறையை சேர்ந்த மேஸ்திரிகள், கட்டிட தொழிலாளர்கள், என்ஜினீயர்கள், லாரி உரிமையாளர்கள் என சுமார் 10 லட்சம் பேர் பாதிக்கப்படுகின்றனர். எனவே, தமிழக அரசு உடனடியாக 50 மணல் குவாரிகளை திறந்து கட்டுமான தொழிலை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனை தொடர்ந்து மாவட்ட செயலாளர் கண்ணையன் நிருபர்களிடம் கூறும்போது, கடந்த 3 மாதங்களில் ஒரு யூனிட் எம்.சாண்ட் விலையை கிரசர் உரிமையாளர்கள் ரூ.1,500 வரை உயர்த்தியுள்ளனர். எனவே, தமிழக அரசு உடனடியாக தலையிட்டு விலையை குறைக்க வேண்டும். மேலும், மணல் குவாரிகளை தமிழக அரசு திறக்காவிட்டால் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன்பு லாரிகளை நிறுத்தி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். வாக்காளர் அடையாள அட்டைகளை அதிகாரிகளிடம் ஒப்படைப்போம். மணல் குவாரி இயங்காத காரணத்தினால் கிரஷர் உரிமையாளர்கள், எம்.சாண்ட், பி.சாண்ட், ஜல்லி விலையை உயர்த்தியதோடு தரமற்ற எம்.சாண்ட் வழங்கி வருகிறார்கள். இதனால் தமிழக அரசுக்கு ரூ.1000 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது, என்றார்.