சுனாமி நினைவு தினம்: மீனவர்கள் அஞ்சலி

தரங்கம்பாடியில் சுனாமியால் இறந்தவர்களுக்கு 19ஆம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது, இதில் அரசியல் பிரமுகர்கள் மீனவர்கள் பங்கேற்றனர்.

Update: 2023-12-26 09:55 GMT

அஞ்சலி செலுத்தியவர்கள்

தரங்கம்பாடியில் சுனாமியால் 315 பேர் உயிரிழந்தனர்.   அவர்களது குடும்பத்தினரும் கிராம மக்களும் ஆண்டுதோறும் நினைவஞ்சலி செலுத்தி வழிபாடு செய்வது வழக்கம்.

இந்நிலையில் 19 ஆம் ஆண்டு நினைவு தினமான இன்று மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு அவர்களது குடும்பத்தினர் தரங்கம்பாடி கடற்கரை மீன் விற்பனை கூடத்தில் யாகம் வளர்த்து தர்ப்பணம் கொடுத்து, கடலில் பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து கிராம மக்கள் கருப்பு பட்டை அணிந்து 700க்கும்‌ மேற்பட்டோர் மவுன ஊர்வலமாக தரங்கம்பாடி கடை வீதியில் உள்ள நினைவு ஸ்தூபிக்கு சென்று மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர், பின்னர் தரங்கம்பாடி பழைய ரயில் நிலையம் அருகே சுனாமியால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்த இடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்‌.

இதுபோல மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சந்திரபாடி, சின்னூர்பேட்டை, சின்னங்குடி, குட்டியாண்டியூர், வெள்ளகோயில், மாணிக்கபங்கு உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்களில் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன், திமுக ஒன்றிய செயலாளர் விஜயகுமார், பாஜக மாவட்ட தலைவர் அகோரம் உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்களும் கலந்துகொண்டு சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

Tags:    

Similar News