ஊட்டச்சத்து குறைபாட்டால் காசநோய் துணை இயக்குனர் தகவல்
ஊட்டச்சத்து குறைபாட்டால் காசநோய் ஏற்படுகிறது என துணை இயக்குனர் தெரிவித்துள்ளார். கொல்லிமலையில் நடைபெற்ற ஊட்டச்சத்து விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்ட பெண்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 60 சதவீதம் காச நோய், ஊட்டச்சத்து குறைபாட்டால் மட்டுமே ஏற்படுகிறது. ஊட்டச்சத்துமிக்க உணவுகளை உட்கொண்டால், காச நோய், ஆஸ்துமா போன்ற நோய்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம் என, காசநோய் பிரிவு துணை இயக்குனர் கூறினார்.
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை தாலுகா, ஆரியூர்நாடு பஞ்சாயத்து, தெம்பலத்தில், மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகம், தர்மபுரி மத்திய மக்கள் தொடர்பு கள அலுவலகம், கொல்லிமலை ஊராட்சி ஒன்றியம் சார்பில், மக்கள் நலத் திட்டங்கள், சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு, சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை மற்றும் ஊட்டச்சத்து மாதம் குறித்த சிறப்பு விழிப்புணர்வு முகாம், நடந்தது. பஞ்சாயத்து தலைவர் நாகலிங்கம் தலைமை வகித்தார். நாமக்கல் மாவட்ட காசநோய் பிரிவு துணை இயக்குனர் வாசுதேவன், முகாமை துவக்கி வைத்து பேசியதாவது:
காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்க, மத்திய, மாநில அரசுகள் அதிக அளவில் முயற்சிகளை எடுத்து வருகின்றன. அரசு மருத்துவமனைகளில் காச நோய்க்கான சிகிச்சைகள்
வழங்கப்பட்டு வருகிறது. 60 சதவீதம் காச நோய், ஊட்டச்சத்து குறைபாட்டால் மட்டுமே உருவாகிறது. ஊட்டச்சத்து மிக்க உணவுகளை நாம் உண்பதன் மூலம் காச நோய் ஆஸ்துமா போன்ற நோய்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம் என அவர் பேசினார்.
மத்திய அரசு தகவல் ஒலிபரப்பு அமைச்சகம், தர்மபுரி மத்திய மக்கள் தொடர்பு கள அலுவலர் பிபின் எஸ்.நாத் முன்னிலை வகித்து பேசும்போது, மத்திய -மாநில அரசு திட்டங்களில் பொதுமக்கள் பயன்பெற வேண்டும், விழிப்புணர்வு பெற வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு, இதுபோன்ற விழிப்புணர்வு முகாம்கள், மலை கிராமங்கள் மற்றும் குக்கிராமங்களில் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக அரசு அறிவித்து, சிறுதானியத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறி வருகிறது. அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கொண்ட, சிறுதானிய உணவுகளை அன்றாட உணவில் நாம் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.
ஊட்டச்சத்து அவசியம் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணன், தனபால், நாமக்கல் இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குனர் ராஜேந்திரபாபு, வட்டார மருத்துவ அலுவலர் தீபன், தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் மணிகண்டன், குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் வள்ளிநாயகி உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.