ராமநாதபுரம்: கடல் அட்டை கடத்திய இருவர் கைது

ராமநாதபுரம் ரூ10 லட்சம் மதிப்புள்ள கடல் அட்டைகள் பறிமுதல் இரண்டு பேரை கைது வனத்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Update: 2023-12-15 14:22 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ராமநாதபுரம் மாவட்ட மன்னார் வளைகுடா தேசிய பூங்கா வனத்துறையினருக்கு தேவிபட்டினம் கடற்கரையிலிருந்து கடல் அட்டை கடத்தப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில் ராமநாதபுரம் வனச்சரக அலுவலர் பிரதாப், வனவர் ராஜேஷ்குமார், வனகாப்பாளர் பாலமுருகன் ஆகியோர், தேவிபட்டினம் கடற்கரையிலிருந்து வேகமாக புறப்பட்டுச் சென்ற காரை தேவிபட்டினம் சோதனைச் சாவடி அருகே விரட்டிச் சென்று பிடித்தனர். காரை சோதனையிட்டபோது 2 சாக்கு மூட்டைகளில் 58 கிலோ பதப்படுத்தப்பட்ட அரசால் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் இருந்தது தெரிய வந்தது.

அதனையடுத்து கடல் அட்டையை கடத்தி வந்த தேவிபட்டினத்தைச் சேர்ந்த கமருதீன் மகன் நவாப் சுல்தான் என்பவரை கைது செய்து, காரையும்,கடல் அட்டைகளையும் பறிமுதல் செய்தனர். இவர் கடல் அட்டையை இலங்கைக்கு கடத்துவதற்காக கீழக்கரையைச் சேர்ந்த அசன்அலி என்பவருக்கு கொண்டு செல்வதாக தெரிவித்தார்.

அதனையடுத்து அசன்அலியையும் வனத்துறையினர் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகளின் சர்வதேச மதிப்பு ரூ. 10 லட்சம் ஆகும். அதனைத் தொடர்ந்து வனத்துறையினர் நவாப் சுல்தான், அசன்அலி ஆகியோரை ராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News