சீரற்ற குடிநீர் வினியோகம் - பொதுமக்கள் சாலை மறியல் முயற்சியால் பரபரப்பு

கோவிலூரில் கடந்த 25 நாட்களாக குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2024-06-24 05:29 GMT

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அடுத்த தெற்கு தேவதானம் ஊராட்சிக்கு உட்பட்டது கோவிலூர் கிராமம். இந்த பகுதியில் 700 குடும்பங்களை சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் வசிக்கும் பகுதியில் செயல்பட்டு வந்த சுகாதார வளாகம் நீர்நிலை புறம்போக்கு பகுதியில் இருந்ததால் பொதுப்பணி துறையினரால் இடித்து அகற்றப்பட்டது.இதற்கு பதிலாக குடியிருப்பில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பால் கட்டிக் கொடுக்கப்பட்ட சுகாதார வளாகத்தை பெண்களால் பயன்படுத்த இயலவில்லை. மேலும் அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள குடிநீர் குழாய்கள் அனைத்தும் சேதம் அடைந்த நிலையில் உள்ளது.

இந்த நிலையில் பல்வேறு காரணங்களால் கடந்த 25 நாட்களாக தங்கள் பகுதிக்கு குடிநீர் வழங்கப்படவில்லை என குற்றம் சாட்டி இன்று பகலில் அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் 50க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் ஊராட்சி அலுவலகத்திற்கு வந்தனர். இவர்களின் புகாருக்கு பதில் அளிக்க ஊராட்சி தலைவர் வரவில்லை என குற்றம் சாட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரே சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் பொதுமக்களை தடுத்து நிறுத்தினர். தங்கள் பகுதிக்கு எந்த ஒரு அடிப்படை வசதியும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் செய்து தரப்படவில்லை எனவும், தங்கள் பகுதியை ஊராட்சி தலைவர் புறக்கணிப்பதாகவும் காவல் துறையினருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

. இதனைத் தொடர்ந்து அங்கு வந்த ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி மற்றும் அவரது கணவர் ஆகியோர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். குழாய்கள் உடைந்துள்ளதால் குடிநீர் வழங்க இயலவில்லை எனவும், விரைவில் குழாய்கள் சரி செய்யப்பட்டு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். பொதுமக்களில் இந்த போராட்டத்தால் சுமார் ஒரு மணி நேரம் தெற்கு தேவதானம் பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

Tags:    

Similar News