மதுரை மேற்கில் உங்களைத் தேடி, உங்கள் ஊரில் முகாம்
மதுரை மேற்கு வட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சங்கீதா, "உங்களைத் தேடி. உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ் ஒரு நாள் வருவாய் வட்ட அளவில் தங்கி பல்வேறு அரசுத் திட்டப் பணிகளை ஆய்வு செய்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மக்களை நாடி, மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் "உங்களைத் தேடி. உங்கள் ஊரில்" என்ற புதிய திட்டத்தினை அறிவித்தார். அதன்படி, மதுரை மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் வாடிப்பட்டி வட்டத்திலும், பிப்ரவரி மாதத்தில் மேலூர் வட்டத்திலும் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா, ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, பாராளுமன்ற தேர்தல் – 2024 அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து கடந்த 3 மாதங்களாக இந்த ஆய்வுப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் நிறைவடைந்ததையடுத்து நடப்பு மாதத்திற்கு (ஜுன்) மதுரை மேற்கு வட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா, நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
முதலாவதாக, மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட சோலை அழகுபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்தார். தொடர்ந்து, மதுரை, சுப்பிரமணியபுரம் கம்பர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு செய்து, பள்ளி மாணவ, மாணவியர்களிடம் பாடதிட்டங்கள் குறித்து உரையாடினார். மேலும், பள்ளியில் பராமரிக்கப்பட்டு வரும் ஆசிரியர் வருகை பதிவேடு, மாணவ, மாணவியர்களின் வருகை பதிவேடுகள் ஆகியவற்றை ஆய்வு செய்தார். தொடர்ந்து, பள்ளியில் கழிப்பறை வசதிகள், குடிநீர் வசதிகள் சரியான முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறதா என்பது குறித்தும், பள்ளியின் உட்கட்டமைப்பு வசதிகள் குறித்தும் ஆய்வு செய்தார்.
அதன்பின்பு, மதுரை நாகமலை புதுக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்தார். மேலும், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சை மேற்கொள்ள வருகைபுரிந்த பொதுமக்களிடம் மருத்துவ சேவைகள் உரிய முறையில் மருத்துவப் பணியாளர்களால் வழங்கப்படுகிறதா என்பது குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, மதுரை சுப்பிரமணியபுரம் நல்லமுத்துகாலனி பகுதியில் உள்ள அமுதம் நியாய விலைக்கடையில் ஆய்வு செய்தார்.
அப்பகுதியில் வசித்து வரும் மக்களிடம் நியாய விலைக் கடையின் மூலம் வழங்கப்படும் பருப்பு, அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் தங்களுக்கு சரியான எடையில் கிடைக்கப்பெறுகிறதா என்பது குறித்து கேட்டறிந்தார். மேலும், நியாய விலைக் கடை மாதந்தோறும் சரியான முறையில் இயங்கி வருகிறதா என்பது குறித்தும் கேட்டறிந்தார். மேலும், நியாய விலைக் கடையில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் சரியான முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறதா என்பது குறித்தும் ஆய்வு செய்தார். மேலும், நியாய விலைக் கடையின் மூலம் வழங்கப்படும் பருப்பு, அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களின் எடை விகிதத்தில் குறையாடு இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்கலாம் என்று பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.
மதுரை சம்மட்டிபுரம் பகுதியில் உள்ள பிள்ளைமார் மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளி நலத்துறை முலம் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாமில் மா.சௌ.சங்கீதா, கலந்து கொண்டு பார்வையிட்டார். மேலும், மதுரை நாகமலை புதுக்கோட்டை, அச்சம்பத்து கால்நடை மருந்தகத்தில் ஆய்வு செய்தார். அதன்பின்பு, நாகமலை புதுக்கோட்டை பகுதியில் செயல்பட்டு வரும் ”வாழ்ந்து காட்டுவோம் திட்டம்” மாவட்ட அலுவலகத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். மேலும், மதுரை காமராசர் பல்கலைக்கழக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா, தலைமையில் "உங்களைத் தேடி. உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ் அனைத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.
அதன்பின்பு, மதுரை மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காண வேண்டும் என்று சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்த நிகழ்வுகளின் போது, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) டாக்டர்.மோனிகா ராணா, உதவி ஆட்சியர் (பயிற்சி) வைஷ்ணவி பால், மாவட்ட வருவாய் அலுவலர் ர.சக்திவேல் உள்ளிட்ட அனைத்துறை அரசு உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.