கீழ்வேளூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றிய குழு கூட்டம்
கீழ்வேளூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது.
நாகை மாவட்டம் கீழ்வேளூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய குழு தலைவர் வாசுகி நாகராஜன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆணையர் ராஜகோபால், ஒன்றிய குழு துணைத் தலைவர் புருஷோத்தமதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசியது... ஒன்றிய குழு உறுப்பினர் தேன்மொழி (அதிமுக): அகரகடம்பனூர் கிராமத்தில் மயானம் செல்லும் பாதையில் உள்ள பாலம் மிகவும் பழுதடைந்துள்ளது அதை உடனடியாக சரி செய்து தர வேண்டும், வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கான ஒப்பந்தங்கள் குறித்த அறிவிப்பு ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்படுவதில்லை.
இதை நிர்வாகம் சரி செய்ய வேண்டும் என்றார். ஒன்றிய குழு உறுப்பினர் கண்ணன் (திமுக): தேவூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் பற்றாக்குறை நிலவி வருகிறது. 7 மருத்துவர்கள் பணிபுரிய வேண்டிய இடத்தில் 1 மருத்துவர் மட்டுமே பணிபுரிவதால் கர்ப்பிணிகள், நோயாளிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.இது குறித்து ஒன்றிய குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
மேலும் தேவூரில் சில பகுதிகளில் கஜா புயலின் போது சேதமடைந்த மின் கம்பிகள் வீடுகளை உரசி கொண்டு செல்கிறது. இதனை மின்சாரத்துறை மூலமாக உடனடியாக சரி செய்து தர வேண்டும் என்றார். ஒன்றிய குழு உறுப்பினர் கருணாநிதி (திமுக) முறையான பாசன வசதி ஏற்படுத்த வெங்கிடங்கால் வாய்க்காலை தூர் வார வேண்டும் என்றார். தலைவர் வாசுகி நாகராஜன்: ஒன்றிய குழு உறுப்பினர்களின் கோரிக்கைகள் நிதிநிலைமையை பொறுத்து உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் செபஸ்டியம்மாள், ஒன்றிய குழு உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.