பொன்னமராவதியில் ஒன்றிய குழு கூட்டம்!
பொன்னமராவதியில் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது.
பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக் குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஒன்றியக் குழு தலைவர் அ. சுதா தலைமை வகித்தார். ஒன்றியக்குழு துணைத் தலைவர் தனலெட்சுமி அழகப்பன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எஸ். ராமச்சந்திரன், ஆயிஷா ராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசியது: வே. பழனிச்சாமி (திருக்களம்பூர்) பொன்னமராவதி அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண நடவடிக்கை தேவை. அரசின் இலவச வீடு வழங்கும் திட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்களின் பரிந்துரையின்பேரில் அவர்களது கவுன்சிலிற்கு உட்பட்ட நலிவுற்ற பொதுமக்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வட்டார வளர்ச்சி அலுவலர் எஸ்.ராமச்சந்திரன்: ஒன்றியக்குழு உறுப்பினரின் கோரிக்கை பரிசீலிக்கப்படும். கோ. பழனியாண்டி: மிகவும் சேதமடைந்து காணப்படும் ஆவாம்பட்டி-படுதினிப்பட்டி சாலையை புதிய சாலையாக அமைத்து தரவேண்டும்.வட்டார வளர்ச்சி அலுவலர் எஸ்.ராமச்சந்திரன்:
ஆவாம்பட்டி- படுதினிப்பட்டி சாலைப்பணிகள் விரைவில் தொடங்கப்படும். எஸ்பி. பழனியப்பன்: நல்லூர், நெறிஞ்சிக்குடி பகுதிகளில் மாட்டுக்கூடம் அமைத்து தரவேண்டும். வட்டார வளர்ச்சி அலுவலர் ஆயிஷா ராணி: விரைவில் அமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படும். அழகுரெத்தினம் சுந்தர்ராஜ்: கொப்பனாபட்டி-மூலங்குடி வழியாக மலம்பட்டி செல்லும் சாலையை சீரமத்து தரவேண்டும். கூட்டத்தில் பங்கேற்று வட்டாரக்கல்வி அலுவலர் சே.ராமதிலகம் பேசியது: அரசு பள்ளி கட்டடங்களில் ஸ்மார்ட்வகுப்பறைகள் தொடங்க போதிய கட்டமைப்பு வசதி செய்து தரவேண்டும்.
மணப்பட்டியில் சேதமடைந்து காணப்படும் அரசு தொடக்கப் பள்ளி கட்டடத்தை சீரமைக்க வேண்டும். வட்டார வளர்ச்சி அலுவலர் எஸ்.ராமச்சந்திரன்: பள்ளிகள் சீரமைப்பு நிதியிலிலிருந்து மணப்பட்டி பள்ளியின் சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட உள்ளது.
கூட்டத்தில், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் அ.அடைக்கலமணி, க.முருகேசன், பி.மாணிக்கம், கல்யாணி மணி மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், சுகாதார ஆய்வ நா.உத்தமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.