அகற்றப்படாத மழை நீர் - பொதுமக்கள் சாலை மறியல்
தூத்துக்குடி மாப்பிள்ளையூரனி பஞ்சாயத்துக்கு உட்பட்ட குமரன் நகர், சோட்டயன் தோப்பு, உள்ளிட்ட பகுதியில் மழைநீர் அகற்றப்படாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இரவு நேரத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் மற்றும் மாநகர பகுதியில் கடந்த 17ஆம் தேதி பெய்த கனமழை மற்றும் குளங்களில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் மற்றும் மாநகரில் மழை வெள்ளம் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதில் தூத்துக்குடி அருகே உள்ள மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்தில் 90% பகுதிகள் மழை நீரில் மூழ்கியது ஆனால் இந்த மழை நீரை அகற்ற மாவட்ட நிர்வாகம் மற்றும் பஞ்சாயத்து நிர்வாகம் முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
கடந்த 11 நாட்களாக பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது இதன் காரணமாக மழை நீர் அசுத்த நீராகும் மாறி பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு கூட செல்ல முடியாமல் துர்நாற்றம் வீசி நோய் பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் இரவு நேரத்தில் கொசு தொல்லை அதிகரித்து உள்ளது. இதனால் ஆத்திரமடைந்த குமரன் நகர் காமராஜர் நகர் சோட்டயன் தொப்பு உள்ளிட்ட பகுதி மக்கள் இரவு நேரத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது தங்களின் பகுதியில் கடந்த 10 தினங்களாக மழைநீர் தேங்கியுள்ளது.
இந்த நீருடன் கழிவு நீரும் கலந்துள்ளதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது மேலும் மின்வெட்டு ஏற்பட்டுள்ளதால் கொசு தொல்லை அதிகரித்துள்ளது உடனடியாக நீரை அகற்ற வேண்டும் என வலியுறுத்தினர் இதை தொடர்ந்து அப்பகுதிக்கு வந்த காவல்துறை மற்றும் வருவாய் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர் அப்போது உயர்தர மோட்டார் மூலம் நீரை அகற்றப்படும் என உறுதி அளித்தனர் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.