பராமரிப்பு இல்லாமல் வீணாகும் பூங்காவை சீரமைக்க வலியுறுத்தல்
Update: 2024-02-10 10:33 GMT
காஞ்சிபுரம் மாவட்டம் சின்ன காஞ்சிபுரம், கே.எம்.வி., நகரில், 2011ல், முன்னாள் முதல்வர் அண்ணாதுரை நுாற்றாண்டு விழாவையொட்டி, 20 லட்சம் ரூபாய் செலவில், மாநகராட்சி சார்பில் பூங்கா அமைக்கப்பட்டது. இப்பூங்காவில், நடைபயிற்சிக்கான நடைபாதை, சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள், அமரும் இருக்கை, இரவில் ஒளிரும் மின்விளக்கு, பச்சை பசேல் புல்தரை, அழகிய மலர் செடிகள், ஓய்வு மண்டபம் உள்ளிட்ட பல வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. கே.எம்.வி., நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதியினர் பூங்காவை பயன்படுத்தி வந்தனர். முறையான பராமரிப்பு இல்லாததால், பூங்காவில் புதர்மண்டி விஷ ஜந்துக்கள் தஞ்சமடைந்தது, இரவு நேரத்தில் 'குடி'மகன்கள் மதுபானம் அருந்தும் மையமாக பூங்காவை பயன்படுத்தி வந்தனர். சீரழிந்த பூங்காவை சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில், 2022ல், 3.50 லட்சம் ரூபாய் செலவில் பூங்கா சீரமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. மகிழ்ச்சியடைந்த பகுதி மக்கள் பூங்காவை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், மாநகராட்சி நிர்வாகம் பூங்காவை மாநகராட்சி நிர்வாகம் மீண்டும் பராமரிக்காததால் பூங்காவில் களைச்செடிகள் புதர்போல மண்டியுள்ளது. மின்விளக்குகள் பழுதடைந்து உள்ளதோடு, சிறுவர்களின் கைகளுக்கு எட்டும் துாரத்தில் மின் ஒயர்கள் வெளியே தெரிகின்றன. விஷ ஜந்துக்கள் நடமாட்டம் உள்ளதோடு, சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் உடைந்துள்ளதால், பூங்காவை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது லட்சக்கணக்கான ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட பூங்கா, இரவு நேரத்தில் சமூக விரோத செயல்கள் அரங்கேறும் இடமாக மாறியுள்ளது. எனவே, பூங்காவை முழுமையாக சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என, கே.எம்.வி., நகரினர் வலியுறுத்தி உள்ளனர்.