வைகாசி அமாவாசை : மாதேஸ்வரன் மலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்
வைகாசி அமாவாசையை முன்னிட்டு மாதேஸ்வரன் மலைக்கு நாளை சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதாக சேலம் கோட்ட அரசு போக்குவரத்து கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் சேலம் கோட்ட அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி நாளை (வியாழக்கிழமை) வைகாசி அமாவாசையை முன்னிட்டு சேலம், தர்மபுரி மாவட்டங்களில் இருந்து மாதேஸ்வரன் மலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறன. அதாவது மாதேஸ்வரன் மலைக்கு சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து மேச்சேரி, மேட்டூர் வழியாகவும், மேட்டூரில் இருந்து கொளத்தூர், பாலாறு வழியாகவும், தர்மபுரியில் இருந்து மேச்சேரி, மேட்டூர் வழியாகவும் 20 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
ஏற்கனவே அந்த வழித்தடத்தில் இருந்து 17 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இளம்பிள்ளை அருகே உள்ள சித்தர் கோவிலுக்கு சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. எனவே பயணிகள் கூட்ட நெரிசல் இன்றி பாதுகாப்பான பயணம் செய்ய வேண்டும் என்று போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.