வைகாசி விசாக திருவிழா

திருப்பூர் ஸ்ரீ விஸ்வேஸ்வர ஸ்வாமி ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவிலில் வைகாசி விசாக தேர் திருவிழா நடைபெற்றது.

Update: 2024-05-22 09:30 GMT

திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர ஸ்வாமி, ஸ்ரீவீரராகவ பெருமாள் கோவில் வைகாசி விசாக தேர் திருவிழாவை முன்னிட்டு 5-ம் நாள் திருவிழாவில்  பஞ்சமூர்த்திகள் புறப்பாடும், கருட சேவையும்  நடைபெற்றது.திரளான பக்தர்கள் பங்கேற்பு.  திருப்பூர் மாநகரின் பிரசித்தி பெற்றதாக ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி மற்றும் ஸ்ரீ வீரராகவப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது.  இக்கோவில்களில் ஆண்டுதோறும் வைகாசி விசாகத் திருநாளை முன்னிட்டு தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுகிறது. இது சைவ, வைணவத்தின் ஒற்றுமையை பறைசாற்றும் விதமாக தமிழகத்தில் வேறெங்கும் இல்லாத சிறப்புடையது.  இதன் தொடக்கமான இரு கோவில்களிலும் கொடியேற்று விழா கடந்த 17ஆம் தேதி நடைபெற்றது. இரண்டாம் நாள் திருவிழாவில் சுவாமி புறப்பாடும், 3-ம் நாள் திருவிழாவில் சுவாமி இராவணேஸ்வரர் வாகனம்,காமதேனு வாகனம் ,சேஷ வாகனத்தில் எழுந்தருளியும்,இன்று ஐந்தாம் நாள் திருவிழாவில் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடும் வெகு விமரிசையாக நடைபெற்றன.

சோமாஸ்கந்தர், விசாலாட்சியம்மன், விநாயகர், சண்டிகேஸ்வரர், வள்ளி, தெய்வானை சமேத சண்முக சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தன. சிறப்பு அலங்காரத்துடன், மலர் அலங்காரம் செய்த வாகனங்களில், 63 நாயன்மார்களுக்கு காட்சி கொடுத்தனர். அதை தொடர்ந்து, தேர் வீதிகளில், பந்தசேவை, வாண வேடிக்கை மற்றும் சிவனடியார்களின் சிவ கண வாத்திய இசையுடன் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடந்தது. 63 நாயன்மார்கள் எதிர்சேவை செய்தபடி செல்ல, பஞ்சமூர்த்திகள் திருவீதியுலா சென்று அருள்பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வைகாசி விசாக திருவிழாவின் முக்கிய விழாவான ஏழாம் நாள் திருவிழா விஸ்வேஸ்வரர் சுவாமி தேரோட்டம் வருகிற 23ஆம் தேதி நடைபெற உள்ளது. தொடர்ந்து எட்டாம் நாள் திருவிழாவில் வருகிற 24 ஆம் தேதி வீரராகவ பெருமாள் திருத்தேரோட்டம் நடைபெறுகிறது. தினமும் கோவில் வளாகத்தில் மாலையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

Tags:    

Similar News