வைகுண்ட பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவக்கம்
காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவிலில் நடப்பு ஆண்டுக்கான பிரம்மோற்சவம் துவங்கியது.
Update: 2024-06-03 08:50 GMT
காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் 10 நாட்கள் பிரம்மோற்சவம் விமரிசையாக நடந்து வருகிறது. அதன்படி நடப்பு ஆண்டுக்கான பிரம்மோற்சவம் நேற்று காலை துவங்கியது. இதில், அதிகாலை 4:00 மணி முதல் 5:00 மணிக்குள், கோவில் கொடிமரத்திற்கு பல்வேறு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, கருடாழ்வார் படம் இடம்பெற்ற கொடி, கொடிமரத்தில் ஏற்றப்பட்டது.
தொடர்ந்து, ஸ்ரீதேவி, பூதேவியுடன் சப்பரத்தில் எழுந்தருளிய வைகுண்ட பெருமாள் ராஜ வீதிகளில் உலா வந்தார். மாலை சிம்ம வாகன உற்சவம் நடந்தது. இதில் மூன்றாம் நாள் உற்சவமான நாளை காலை கருடசேவை உற்சமும், ஏழாம் நாள் உற்சவமான ஜூன் 7ம் தேதி காலை தேரோட்டமும், ஜூன் 9ம் தேதி காலை தீர்த்தவாரியும், இரவு முகுந்த விமானம் உற்சவத்துடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.