வந்தே பாரத் ரயில் நாமக்கல்லில் நின்று செல்ல நடவடிக்கை - எல்.முருகன்

மதுரை -பெங்களூரு வந்தே பாரத் ரயில், நாமக்கல் ரயில் நிலையத்தில் நின்று செல்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.

Update: 2024-06-24 03:32 GMT

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர் சந்திப்பு  

நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வருகை தந்த மத்திய தகவல்- ஒலிபரப்பு, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் எல். முருகனுக்கு நாமக்கல் மாவட்ட பாஜக சார்பில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள விருந்தினர் இல்லத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பது மிகவும் வேதனையான ஒன்று. தமிழக முதல்வர் நேரடியாக அங்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூற வேண்டும். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இதேபோன்று மரக்காணத்தில் கள்ளச்சாராயம் அருந்திய மக்கள் பலர் உயிரிழந்தனர். கள்ளச்சாராயத்தால் உயிரிழப்பு நிகழ்வுகள் தொடர்கதையாகி வருகின்றன. தமிழக அரசு சம்மந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மெத்தனால் எங்கிருந்து கொண்டுவரப்பட்டது என்பதை கண்டறிய வேண்டும். காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், இனி இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கியது தவறு என கூற முடியாது. ஏனென்றால் அந்த தவறுக்கு காரணமே தமிழக அரசு தான். தமிழகம் முழுவதும் அரசு மதுபானக் கடைகள் அதிக அளவில் உள்ளன. திமுக ஆட்சி பொறுப்பேற்றால் மதுக்கடைகளை குறைப்போம் என்றார்கள். ஆனால் இதுவரை மதுபான கடைகள் குறைக்கப்படவில்லை. கஞ்சா உள்பட புகையிலை பொருட்கள் அதிக அளவில் விற்பனையாகி வருகின்றன. குறிப்பாக பள்ளிகள் அருகில் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 3-வது முறையாக பிரதமர் மோடி பொறுப்பேற்றுள்ளார். அவர், தமிழகத்துக்கு ரூ. 11 லட்சம் கோடி வரை நிதியை வழங்கி பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்த வழங்கியுள்ளார்.

ஜூன் 21-ம் தேதி ஆண்டுதோறும் யோகா தினமாக கொண்டாடப்படுகிறது. அனைத்து பள்ளி, கல்லூரிகளில் யோகா வகுப்புகள் நடைபெற வேண்டும். யோகா என்பது நமது முன்னோர் நமக்கு கொடுத்த கொடை ஆகும். மதுரை -பெங்களூரு வந்தே பாரத் ரயில், நாமக்கல் ரயில் நிலையத்தில் நின்று செல்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.சமூக ஊடகங்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும். தவறான செய்திகளை பரப்பக் கூடாது. அரசின் திட்டங்கள், ஆக்கப்பூர்வமான/ பயனுள்ள செய்திகளை வழங்க வேண்டும். பிரசார பாரதியை பொருத்தவரை, DD தமிழ் புதுப்பொலிவுடன் ஒளிபரப்பாகி வருகிறது. அதேபோல, நாடு முழுவதும் தூர்தர்ஷன்-இன் தொழில்நுட்பம் மேம்படுத்தப்படும். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறித்து சமூக ஊடகங்களில் தகவல் பரப்பியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் மத்திய தகவல்- ஒலிபரப்பு, நாடாளுமன்ற விவரங்கள் துறை இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன் தெரிவித்தார்.

பேட்டியின் போது பாரதிய ஜனதா கட்சியின் நாமக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, மேற்கு மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார், நகர தலைவர் சரவணன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News