வாணியம்பாடி : அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி சாலை மறியல்
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட செட்டியப்பனூர் ஊராட்சி , கரிமபாத் பகுதியில் ஒரு மாத காலமாக மின்விளக்கு எரியவில்லை, என்றும் முறையான குடிநீர் வழங்கவில்லை, குடியிருப்பு பகுதிகளில் தெரு விளக்குகள் இன்றி இருளில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தவித்து வருவதாகவும், மேலும் ஊராட்சி சார்பில் முறையாக குப்பைகளை எடுக்காமல் , கழிவு நீர் கால்வாய்களை சரியாக தூர்வாரவில்லை எனவும், மேலும் பல்வேறு அடிப்படை வசதிகளும் முறையாக செய்து தரவில்லை என கூறி இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், கரிமாபாத் பகுதியில் சாலையில் அமர்ந்து அப்பகுதி மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த கரிமாபாத் வார்டு உறுப்பினர் பாப்பா பாய், ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் தனஞ்செழியன், ஊராட்சி செயலாளர் கணபதி ஆகியோரை அழைத்துச் சென்று அங்கு அடிப்படை வசதிகள் இல்லாததை சுட்டி காட்டி காண்பித்த பின்னர் அவர்களை நூற்றுக்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு மேலும் மூன்று மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியலில் ஈடுபட்டனர் பின்னர் இந்நிகழ்வு குறித்து அறிந்து கரிமாபாத் பகுதிக்கு விரைந்து சென்ற வாணியம்பாடி தாலுகா காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி ஓரிரு நாட்களில் கரிமாபாத் பகுதியில் அடிப்படை வசதி செய்து தர ஊராட்சி நிர்வாகத்திடம் கூறி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.