வேலங்குடியில் முப்பெரும் விழா - ஏராளமானோர் பங்கேற்பு
வேலங்குடியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம் வேலங்குடி கிராமத்தில் செயல்பட்டு வரும் அன்னை பாத்திமா (ரலி) நிஸ்வான் பெண்கள் மதரஸா (அரபி பள்ளியில்) ஏழாம் ஆண்டு நிறைவு விழா, எட்டாம் ஆண்டு துவக்க விழா, மூன்றாம் ஆண்டு பட்டமளிப்பு விழா என முப்பெரும் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக இவ்விழாவானது கிராத் ஓதி துவங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிவகங்கை மாவட்ட அரசு டவுன் ஹாஜி கே.எம் முகமது பாரூக்,மாவட்ட ஜமாத் உலமா சபை செயலாளர் முகமது பத்ருத்தின் யூசுபி ஆகியோரின் மார்க்க சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார்.
அதில் இன்றைய காலகட்டத்தில் பெண் கல்வி எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், மேலும் திருமணம் முடித்து புகுந்த வீட்டிற்கு செல்லும் பெண்கள் அங்கு கடைபிடிக்க வேண்டிய ஒழுக்க நெறிமுறைகளும் விட்டுக் கொடுக்கும் தன்மையோடு குடும்ப ஒற்றுமையை கடைபிடிப்பது பற்றியும், மார்க்க கல்வியோடு பெண்களும் தொழில் கல்வி கற்று அதில் பெரும் புரட்சியை ஏற்படுத்தி அதன் மூலம் பொருளாதாரத்தை ஈட்டும் வழி முறைகளும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மக்களுக்கு பயனுள்ள தகவல்களை காட்சி பொருளாக வடிவமைத்து அரங்கில் கண்காட்சிக்காக வைக்கப்பட்டு இருந்த சிறந்த பயனுள்ள விஷயங்களை தனிப்பெரும் முயற்சியாக திறமை மூலம் வெளிப்படுத்திய மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து கடந்த ஆண்டு பயின்று தேர்ச்சி பெற்ற மாணவிகளின் பெற்றோர்கள் இடத்தில் அதற்கான பட்டங்களும் பரிசுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.