விசிக- காவல்துறையினர் இடையே தள்ளுமுள்ளு- கைதானவர்கள் உண்ணாவிரதம்
அரியலூரில் விசிக- காவல்துறையினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதை தொடர்ந்து கைதானவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
அரியலூர் பேருந்து நிலையம் அருகே சக்தி விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் திருச்சியில் நடைபெறவுள்ள வெல்லும் ஜனநாயக மாநாட்டு விளம்பர பேனர் வைக்கபட்டு இருந்தது.
இதனை அகற்ற வேண்டும் என விசுவ இந்து பரிஷத் சார்பில் அரியலூர் நகர காவல் நிலையத்தில் மனு அளிக்கபட்டுள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் மற்றும் நகராட்சி பணியாளர்கள் அதனை அகற்றியுள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து அனைத்து கட்சியினர் மற்றும் நிறுவனங்கள் வைக்கும் இடத்தில், நாங்கள் ஏன் பேனர் வைக்ககூடாது எனக்கூறி விசிகவினர் மீண்டும் அங்கு பேனர் வைக்க முயன்றனர். அப்போது போலீசாருக்கும், விசிகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனையடுத்து விசிக மேற்கு மாவட்ட செயலாளர் அங்கனூர் சிவா உள்ளிட்ட அக்கட்சி நிர்வாகிகளை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். அங்கு காவல்துறை சார்பில் வழங்கபட்ட மதிய உணவினை சாப்பிடாமல் விசிகவினர் உண்ணாவிரத, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடதக்கது.