ஸ்பைசஸ் பார்க் மேலாளர் மது அருந்தும் வீடியோ
மத்திய அரசின் ஸ்பைசஸ் பார்க் மேலாளர் அலுவலகத்திற்குள் மது அருந்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
சிவகங்கை அருகே அரசனி முத்துப்பட்டி கிராமத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு மத்திய அரசின் நறுமன பொருட்கள் வாரியத்தின் சார்பில் 75 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு ரூ20 கோடி மதிப்பீட்டில் மத்திய நறுமன பூங்காவானது அமைக்கப்பட்டது. இங்கு அலுவலக கட்டிடம், தொழில்கூடம், நறுமன பொருட்களை சேர்த்துவைக்க கூடிய குடோன், மற்றும் மதிப்புக்கூட்டு பொருட்களை சேர்த்துவைக்க குளிரூட்டப்பட்ட குடோன்கள் என ஏராளமான கட்டிடங்கள் அமைக்கப்பட்டது. சிவகங்கை,ராமநாதபுரம் மாவட்டங்களில் விளைவிக்க கூடிய குண்டுமிளகாய், மஞ்சள் ஆகியவற்றிற்கு இந்திய சந்தை மதிப்பில் தனி இடம் உண்டு என்பதாலேயே இந்த ஸ்பைசஸ் பார்க் இங்கு அமைக்கப்பட்டது.
ஆனால் தொழில் முனைவோர் யாரும் ஆர்வம் காட்டாததால் அந்த கட்டிடங்களில் தற்சமயம் ஒன்று மட்டும் தொழில் நிறுவனம் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த பூங்காவின் மேலாளராக போஸ் என்பவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் பணி நியமனம் செய்யப்பட்டு பணிபுரிந்து வருகிறார். இவரது சொந்த ஊர் வேறு பகுதி என்பதால் அலுவலகத்திலேயே தங்கி பணிபுரிந்துவருகிறார். இவர் மீது ஏற்கனவே தொழில் முனைவோர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறிவந்த நிலையில் தற்சமயம் இவர் அலுவலகத்திற்குள்ளேயே மதுவை கிளாஸில் ஊற்றி வைத்து இருப்பதுபோன்ற காட்சிகளும், மதுபோதையில் உளறுவது போன்ற காட்சிகளும் தலைக்கேறிய போதையில் தரையிலேயே படுத்துறங்குவது போன்ற காட்சிகளும் சமூக வலைதளங்களில் வெளியாகி பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.