விக்கிரவாண்டி : பறக்கும் படையினர் சோதனை குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு

Update: 2024-06-17 02:59 GMT

ஆட்சியர் ஆய்வு 

விக்கிரவாண்டி சட்டப் பேரவைத் தொகுதிக்கான இடைத் தோ்தல் ஜூலை 10-ஆம் நடைபெறுகிறது. தோ்தலை முன்னிட்டு, மாவட்டத்தில் ஜூன் 10-ஆம் தேதி முதல் தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இதையடுத்து, மாவட்டத்தில் 3 பறக்கும் படை குழுக்கள், 3 நிலையான கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.இந்தக் குழுவினா் மாவட்டம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்

. இதன் ஒரு பகுதியாக ராதாபுரம் சோதனைச்சாவடி, விக்கிரவாண்டி சுங்கச்சாவடி மற்றும் தென்னமாதேவி பகுதிகளில் தோ்தல் பறக்கும் படையினா் ஞாயிற்றுக்கிழமை தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். இந்தப் பணிகளை விழுப்புரம் மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான சி.பழனி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.அப்போது, சோதனை செய்யப்பட்ட வானங்கள், பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களின் விவரங்களை பறக்கும் படையினரிடம் கேட்டறிந்தாா்.

தோ்தல் விதிமுறைகளை மீறி கொண்டு வரப்படும் ரொக்கப் பணம், பரிசுப் பொருள்கள் மற்றும் மதுப் புட்டிகளை உடனடியாக கைப்பற்றி மாவட்ட தலைமையிடத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். வாகன ஓட்டிகளிடம் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும். மகளிரின் உடைமைகளை பெண் காவலா்களை கொண்டே பரிசோதிக்க வேண்டும் என அறிவுறுத்தினாா்.ஆய்வின்போது, விக்கிரவாண்டி வட்டாட்சியா் யுவராஜ் உடனிருந்தாா்.

Tags:    

Similar News