தம்மம்பட்டி அருகே சாலையை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் மறியல்

தம்மம்பட்டி அருகே சாலையை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2024-06-07 13:07 GMT

சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள் 

சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே வாழக்கோம்பை, சேரடி வழியாக கொல்லிமலைக்குசெல்லும் சாலை உள்ளது. இந்த சாலை தினந்தோறும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வாகனங்களில் சென்று வருகின்றனர். இந்த நிலையில் சேரடியில் இருந்து 300 மீட்டர் அளவுக்கு சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது.

இதனால் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்வோர் அவதியடைந்து வருகின்றனர். மேலும் அவ்வப்போது சிறிய விபத்துக்களம் நடந்து வந்தன. இதனால் ஆத்திரம் அடைந்த மலைவாழ் மக்கள் சாலையை சீரமைக்கக்கோரி நேற்று சேரடியில் அந்த வழியாக சென்ற அரசு பஸ்சை சிறைபிடித்து சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவஇடத்துக்கு சென்ற தம்மம்பட்டி போலீசார் மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதில் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் கூறி சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதில் சமாதானம் அடைந்த கிராம மக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News