காங்கிரஸ் தேர்தல் விதிமுறை மீறல் - உயர் நீதிமன்றத்தில் பாஜக வழக்கு
உத்தரவாத அட்டை என்ற பெயரில் தேர்தல் ஆணையத்தின் விதியை மீறியதாக காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மீது பாஜக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
காங்கிரஸ் கட்சியின் விருதுநகர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் மாணிக்தாகூர் இந்திய தேர்தல் ஆணையத்தின் உறுதிமொழியை மீறி காங்கிரஸ் உத்திரவாத அட்டை எனும் பெயரில் பொதுமக்களிடம் வாக்காளர் அடையாள அட்டை எண் மற்றும் தொலைபேசி எண் வாங்கி அட்டைகளை விநியோகம் செய்து பதிவு செய்து தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டதாக பாரதிய ஜனதா கட்சி ஊடகப் பிரிவு மாவட்ட தலைவர் செல்வக்குமார் CVigil App மூலம் பதிவு செய்து பறக்கும் படை மூலம் FIR பதிவு செய்து இருந்தார்.
அதனை தொடர்ந்து விருதுநகர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக் தாகூரை தகுதி நீக்கம் செய்ய வலியுறுத்தி கடந்த 17ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்தார். இது தேர்தல் வழக்கு என்பதால் மதுரை உயர்நீதிமன்றத்திலிருந்து வழக்கு நம்பர் பதிவு செய்யப்பட்டு சென்னை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த வழக்கானது நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மற்றும் நீதியரசர் சத்திய நாராயணா பிரசாத் அடங்கிய முதன்மை அமர்வில் விசாரணை செய்யப்பட்டது இன்று தமிழகத்தில் தேர்தல் நடைபெற இருப்பதால் போதிய கால அவகாசம் இல்லாததாலும் நீதிமன்றம் மூன்று நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் திங்கட்கிழமை உடனடியாக வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவித்தார்கள்.