விருதுநகர் புத்தகத் திருவிழா - நாளை அமைச்சர்கள் துவக்கி வைப்பு
Update: 2023-11-15 04:58 GMT
விருதுநகரில் மாவட்ட நிர்வாகம், பொது நூலகத்துறை தமிழ்நாட்டின் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து, விருதுநகர்-மதுரை சாலையில் அமைந்துள்ள கே.வி.எஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள பொருட்காட்சி மைதானத்தில் 16.11.2023 முதல் 27.11.2023 வரை நடைபெறவுள்ள இரண்டாவது விருதுநகர் புத்தகத் திருவிழாவினை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் மற்றும் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் நாளை காலை 10.00 மணியளவில் துவக்கி வைக்க உள்ளனர். மேலும், துவக்க விழா நிகழ்ச்சியில், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.இந்த புத்தகத் திருவிழாவில் தினந்தோறும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி போன்ற பல்வேறு போட்டிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள்;, சிறப்பு எழுத்தாளர்கள் பங்கேற்கும் சொற்பொழிவுகள் மற்றும் பல்வேறு தலைப்புகளில் இலக்கிய நிகழ்ச்சிகள், சுழலும் சொல்லரங்கம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன. மேலும், 16.11.2023 முதல் 27.11.2023 வரை நடைபெறும் புத்தகத் திருவிழாவில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவ,மாணவியர்களுக்கான பல்வேறு போட்டிகளும், பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவ,மாணவியர்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கான கலை நிகழ்ச்சிகளும், மாலை 4 மணி முதல் 5 மணி வரை நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. அதனை தொடர்ந்து, மாலையில் தலைசிறந்த ஆளுமைகள் கலந்து கொள்ளும் சிறப்புரைகள், பட்டிமன்றம், இலக்கிய அரங்கு நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.