சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு முகாம்
சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதியில் 100% வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு முகாம்.
Update: 2024-03-27 02:10 GMT
சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும். 18 வயது நிரம்பிய முதல் வாக்காளர்கள் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், அதே போன்று வயதான முதியவர்கள் வீட்டில் இருந்த படியே வாக்களிக்க தேவையான விழிப்புணர்வு நடவடிக்கைகள் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பாலச்சந்தர் தலைமையில் எடுக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து நேற்று சேலம் அம்மாபேட்டை கடலூர் மெயின் ரோடு காமராஜர் வளைவு பகுதியில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கல்லூரி மாணவர்களின் ஊர்வலம் நடைபெற்றது. இதை மாநகராட்சி செயற்பொறியாளரும், தேர்தல் கண்காணிப்பு அலுவலருமான பழனிசாமி தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து அந்த வழியாக வந்த பஸ் மற்றும் வேன், கார், மோட்டார் சைக்கிள்களில் தேர்தல் நாளை குறிக்கும் விதமாக ஏப்ரல் 19-ந்தேதி என்ற ஸ்டிக்கரை ஒட்டி வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்த நிகழ்ச்சியில் அம்மாபேட்டை மண்டல உதவி பொறியாளர் பாஸ்கரன், உதவி பொறியாளர் சுமதி, உதவி ஆணையாளர் வேடியப்பன், செயற்பொறியாளர் செந்தில்குமார் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.