வார்டு உறுப்பினர்கள் ராஜினாமா

மேட்டுப்பட்டி ஊராட்சியில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காததால், வார்டு உறுப்பினர்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்து கலெக்டரிடம் கடிதம் அளித்தனர்.

Update: 2024-03-05 09:44 GMT

மேட்டுப்பட்டி ஊராட்சியில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காததால், வார்டு உறுப்பினர்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்து கலெக்டரிடம் கடிதம் அளித்தனர்.  

சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டணம் ஒன்றியம் மேட்டுப்பட்டி ஊராட்சியை சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் வளர்மதி, தியாகராஜன், அனுசுயா கவிதா ஆகியோர் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் தங்களது வார்டில் எவ்வித அடிப்படை வசதிகளும் இதுவரை செய்து கொடுக்காததால் வார்டு உறுப்பினர்கள் பதவியை ராஜினாமா செய்வதாக கூறி அதற்கான கடிதத்தை கலெக்டர் பிருந்தாதேவியிடம் வழங்கினர்.

இதுகுறித்து அவர்கள் கலெக்டரிடம் அளித்துள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- தி.மு.க.வை சேர்ந்த வார்டு உறுப்பினர்களான எங்கள் பகுதிக்கு சாலை, குடிநீர், கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவில்லை. இதுபற்றி அ.தி.மு.க.வை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவரிடம் கேட்டால் சரியான பதில் தருவதில்லை. மாதாந்திர கூட்டமும் சரியாக நடப்பதில்லை. இது சம்பந்தமாக பலமுறை அவரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், அயோத்தியாபட்டணம் வட்டார வளர்ச்சி அலுவலரிடமும் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை.

ஊராட்சி வரவு-செலவு கணக்கு விவரங்களை எங்களிடம் படித்து காண்பித்தது இல்லை. வார்டில் அரசு திட்டப்பணிகள் எது செய்தாலும் முறையாக தகவல் தெரிவிப்பது கிடையாது. 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திலும், தனிநபர் கழிப்பிடம் திட்டத்திலும் முறைகேடு நடப்பதாக சந்தேகம் உள்ளது. இதுபற்றி பலமுறை மனு கொடுத்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாத காரணத்தினால் எங்களது வார்டு உறுப்பினர்கள் பதவியை ராஜினாமா செய்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

Tags:    

Similar News