கனமழை காலங்களில் நெற்பயிரில் நீர், பூச்சி மற்றும் நோய் மேலாண்மை 

Update: 2023-11-24 06:38 GMT
வயலுக்கு உரமிடும் விவசாயி
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ச.மாலதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது, பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சுமார் 5,000 ஹெக்டேர் சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. எனவே நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள், வயலில் உள்ள வடிகால் பகுதியில் தடைகள் இருந்தால், அதனை அகற்றி அருகில் உள்ள நீர் நிலைகளில் தேவைக்கு அதிகமான நீர் இலகுவாக சென்றடைய வழிவகை செய்ய வேண்டும்.

இதுபோன்ற வெள்ள அபாய நேரங்களில் நிலங்களில் சத்து இழப்பு ஏற்பட்டு பயிர் பாதிக்க நேரிடும். இதனை சரிசெய்ய வெள்ள நீரை வடிக்க வேண்டும். நெற்பயிா் இளம் பயிராக இருந்தால், இலைவழி தெளிப்பாக 2 கிலோ யூரியா 20 லிட்டா் நீரிலும், 1 கிலோ ஜிங்க் சல்பேட்டை 10 லிட்டா் நீரில் ஒருநாள் இரவு முழுவதும் ஊறவைத்து, மறுநாள் காலை தெளிந்த நீரை வடிகட்டி, 200 லிட்டராக பெருக்கி, ஓா் ஏக்கருக்கு கைத்தெளிப்பானைக் கொண்டு தெளிக்கவேண்டும்.

நெற்பயிரில் தண்டு உருளும் நிலை அல்லது பூக்கும் தருவாயில் இருந்தால், இலைவழி தெளிப்பாக 4 கிலோ டிஏபி 40 லிட்டா் நீரிலும், 2 கிலோ யூரியாவை 20 லிட்டா் நீரிலும், 1 கிலோ பொட்டாஷை 10 லிட்டா் நீரிலும் கரைத்து ஒருநாள் இரவு முழுவதும் ஊறவைத்து, மறுநாள் காலை தெளிந்த நீரை வடிகட்டி 200 லிட்டராக பெருக்கி, ஓா் ஏக்கருக்கு கைத்தெளிப்பானைக் கொண்டு தெளிக்கவேண்டும். வயலில் நீரை வடித்தவுடன் மேலுரமாக ஏக்கருக்கு 30 கிலோ அமோனியம் சல்பேட், 15 கிலோ பொட்டாஷ், 10 கிலோ வேப்பம் புண்ணாக்கு இடவேண்டும். அல்லது 22 கிலோ யூரியா, 18 கிலோ ஜிப்சம், 4 கிலோ வேப்பம் புண்ணாக்கு, 17 கிலோ பொட்டாஷ் உரங்களை மேலுரமாக ஓா் ஏக்கருக்கு இடவேண்டும்.

பயிா் நன்கு வளா்ச்சியடையும்போது பூச்சி மற்றும் நோய்த் தாக்குதல் அதிகமாக இருக்கும். அதற்கு 1 கிலோ சூடோமோனாஸ் புளோரசன்ஸ் மற்றும் 1 லிட்டா் புளித்த தயிரை 200 லிட்டா் நீரில் கரைத்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்கவேண்டும். இக்காலங்களில் நெற்பயிரில் ஏற்படும் இலை உறை நோயை கட்டுப்படுத்த புரப்பிகோனசோல் 200 மில்லி அல்லது கார்பன்டசிம் 200 கிராம், ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கொடுக்க வேண்டும். மேற்கண்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பயன்பெறலாம்" எனக் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News