சிவகாசியில் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ள தர்ப்பூசணி பழங்கள்

சிவகாசி பகுதியில் விற்பனைக்காக தர்ப்பூசணி பழங்கள் குவிக்கப்பட்டுள்ளன.

Update: 2024-03-09 16:22 GMT
சிவகாசி பகுதியில் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ள தர்ப்பூசணி பழங்கள்...

விருதுநகர் மாவட்டம், சிவகாசி பகுதியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படும் நிலையில்,நகரில் பல்வேறு பகுதியில் தர்பூசணி பழம் விற்பனை களைகட்டியுள்ளது. இந்த ஆண்டு கோடை காலம் முன்கூட்டியே தொடங்கிவிட்டதன் காரணமாக,தற்போது தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.

கந்தக பூமியான சிவகாசியில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் பொதுமக்களை வாட்டி வதைக்கிறது. இதனால் பொதுமக்கள் பகலில் வெளியே செல்ல முடியாமல் வீட்டிற்குள்ளே முடங்கி இருகின்றனர்.

கோடை வெப்பத்தை தணிப்பதற்கு பொதுமக்களின் கவனம் குளிர்ச்சியான இயற்கைப் பொருட்களின் மீது திரும்பியுள்ளது.தற்போது நகரில் இளநீர்,தர்பூசணி,வெள்ளரிக்காய் உள்ளிட்ட பொருட்களை ஆர்வத்துடன் விரும்பி வாங்கி செல்கின்றனர். இதில் தாகத்தை தீர்க்கும் தர்ப்பூசணி பழங்கள் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.இதனால் சிவகாசியில் பலபகுதிகளுக்கும் லாரிகளில் விற்பனைக்காக டன் கணக்கில் வர துவங்கியுள்ளது.

சிவகாசியில் திருத்தங்கல் ரோடு, திருவில்லிபுத்தூர் ரோடு,சாத்தூர் ரோடு, பை பாஸ் ரோடு,திருத்தங்கல் உள்ளிட்ட பகுதிகளில் தர்ப்பூசணி கடைகள் முளைத்துள்ளன.இந்த வழியாக செல்லும் இருசக்கர மற்றும் நான்குசக்கர வாகனங்களில் வருவோர் இதை ருசி பார்த்து உடல் வெப்பத்தை தணிக்கின்றனர்.தர்ப்பூசணி பழங்களின் வரவால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஒரு கிலோ தர்பூசணி பழம் 20 ரூபாய்க்கும், கடைகளில் ஒரு பழத்தை வெட்டி ஒவ்வொரு துண்டுகளாக வெட்டி ஒரு துண்டு 10 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வெயிலின் தாக்கத்தால் இந்த தர்ப்பூசணி பழத்தை விரும்பி உண்ணுகின்றனர்.மேலும் இது குறித்து தர்ப்பூசணி பழ வியாபாரிகள் கூறுகையில், தர்ப்பூசணி பழம் சாப்பிடுவதால் நல்ல பலன் கிடைக்கும். உடம்பில் நீர்ச்சத்து அதிகரிக்கும். இதனால் அனைவருக்கும் இந்த தர்ப்பூசணி பழம் ஒரு வரப்பிரசாதம். மேலும்,சிவகாசி பகுதியில் தர்ப்பூசணி பழத்தின் வரத்து அதிகமாக இருப்பதாலும்,

விலை குறைவாக இருப்பதாலும் பொதுமக்களும் தர்ப்பூசணி பழத்தை வாங்கி அதிகமாக பயன் பெறுகின்றனர்.இதனால் எங்களுக்கும் நல்ல வருமானம் கிடைக்கிறது என்று வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Tags:    

Similar News