பேரணாம்பட்டு அருகே வாழை தோப்பை சூறையாடிய காட்டு யானைகள்

பேரணாம்பட்டு அருகே காட்டு யானைகள் விவசாய நிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்தது.

Update: 2024-04-28 11:19 GMT

யானைகள் சேதமாக்கிய வாழை மரங்கள் 

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு வனச்சரகம் மோர்தானா அணை திட்ட பகுதியிலிருந்து ஒரு குட்டி உள்பட 5 காட்டு யானைகள் வெளியேறி குண்டலபல்லி வனப்பகுதி வழியாக டி.டி.மோட்டூர் கொல்லைமேடு பகுதிக்கு வந்துள்ளன.

இதனையறிந்த பேரணாம்பட்டு வனச்சரகர் சதீஷ்குமார் தலைமையில் வனவர் மாதேஸ்வரன், வன காப்பாளர்கள் சக்தி, சதீஷ்குமார் ஆகியோர் அங்கு சென்றனர். கிராமமக்கள் உதவியுடன் அவர்கள் குண்டலபல்லி வனப்பகுதிக்குள் சுமார் 2 கி.மீ. தூரம் சென்று பட்டாசு, பாணம், வெடித்து யானைகளை விரட்டினர்.

ஆனால் காட்டு யானைகள் காட்டுக்குள் செல்வதுபோன்று போக்குக்காட்டி விட்டு மீண்டும் விவசாய நிலங்களுக்குள் நுழைந்தன. அங்குள்ள யோகானந்தன் என்பவருக்கு சொந்தமான வாழை, தென்னை தோப்பில் புகுந்து குலைகளுடன் கூடிய வாழை மரங்கள், தென்னை மரங்களை சூறையாடின. மேலும் அங்கு விவசாய பாசனத்திற்கு செல்லும் குழாய்களை உடைத்து சேதப்படுத்தின.

அருகிலுள்ள சிறுவேல் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த கத்தரி செடிகளை பிடுங்கி எறிந்தும், கணபதி என்பவரது மாந்தோப்பில் புகுந்து மா மரக்கிளைகளை முறித்தும் சேதப்படுத்தின. காட்டு யானைகளால் சேதமடைந்த விவசாய நிலங்களை டிடி மோட்டூர் கிராம நிர்வாக அலுவலர் நியோ ரொட்டக்ஸ் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

Tags:    

Similar News