வெளிகரம் சிவாலயம் புனரமைக்கப்படுமா?
தொன்மை வாய்ந்த வெளிகரம் சிவாலயத்தை புனரமைக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Update: 2023-12-26 07:46 GMT
பள்ளிப்பட்டு அடுத்த வெளிகரம் கிராமத்தில், சோமநாதீஸ்வரர் ஊர்க்கோவில் மற்றும் கிராமத்தின் வடக்கில் மலைக்கோவிலும் அமைந்துள்ளது. பழமையான இந்த கோவில்களுடன், கிராமத்தின் கிழக்கிலும் மற்றொரு சிவாலயம் அமைந்துள்ளது. கோவில் பிரகாரம் மற்றும் துாண்களில் உள்ள சிற்பங்கள், கோவிலின் தொன்மையை உணர்த்துவதாக உள்ளன. கோவிலின் பிரகாரம் மற்றும் கருவறை மிகவும் உருக்குலைந்து உள்ளது. இந்த கோவிலில் உள்ள சிவலிங்கத்தின் ஆவுடையார் ஒரு அடி உயரம் மட்டுமே கொண்டுள்ளது. அகலம், மூன்றரை அடி உள்ளது. குறைவான உயரத்தில், பரந்து விரிந்துள்ள இந்த சிவலிங்கத்தின் அமைப்பு, சுற்றுப்பகுதியில் வேறு எங்கும் காணக்கிடைக்காத தரிசனம். கோவில் துாண்களிலும் ஏராளமான சுவாமி உருவங்கள் வடிக்கப்பட்டுள்ளன. கோவிலின் மேல்தளம் சிதைந்து கிடக்கும் நிலையில், அரச மரக்கன்றுகளும் புற்களும் முளைத்து வலுவிழக்கும் நிலை உள்ளது. கோவிலுக்குள் நுழைய அச்சப்படும் விதமாக, கோவிலின் உறுதி கேள்விக்குறியாக உள்ளது. ஆனாலும், பக்தர்கள் சென்று நித்திய பூஜை நடத்தி வருகின்றனர். கோவிலை புனரமைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.