கே.வி.குப்பத்தில் பெண் தற்கொலை
கே வி குப்பத்தில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் ,கே.வி.குப்பம் அருகே மேல் காவனூரைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் கே.வி.குப்பத்தில் காய்கறி கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி சக்திபிரியா (27). இவர்கள் கே.வி.குப்பத்தில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் சக்திபிரியா, வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு கொண்டார். இதைப் பார்த்த அவருடைய தாயார் அவரை மீட்டு, உறவினர்களுடன் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டார் என்று தெரிவித்தனர். இதுகுறித்து கே.வி.குப்பம் இன்ஸ்பெக்டர் நிர்மலா வழக்குப்பதிவு செய்து, சக்திபிரியாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.