நுண்கடன் நிதி நிறுவனங்களின் பிடியிலிருந்து பெண்களை காப்பாற்றணும்...!

தஞ்சாவூரில் நுண்கடன் நிதி நிறுவனங்களின் பிடியிலிருந்து பெண்களை காப்பாற்ற வேண்டும் என மாதர் சங்கம் மனு அளித்துள்ளனர்.

Update: 2023-12-05 07:29 GMT

தஞ்சாவூரில் நுண்கடன் நிதி நிறுவனங்களின் பிடியிலிருந்து பெண்களை காப்பாற்ற வேண்டும் என மாதர் சங்கம் மனு அளித்துள்ளனர். 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

நுண்கடன் நிதி நிறுவனங்கள் பிடியில் சிக்கி தவிக்கும் பெண்களை காப்பாற்ற வேண்டும் என வலியுறுத்தி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில், ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு, மாவட்ட ஆட்சியர் மூலம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. 

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் இ.வசந்தி தலைமையில், மாநில குழு உறுப்பினர் ஆர். கலைச்செல்வி, மாவட்ட நிர்வாகிகள் வனரோஜா, புனிதா, ஜெனிஃபர் ஆகியோர் திங்களன்று மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப்பிடம் நேரில் சந்தித்து அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது,  "நுண் நிதி நிறுவனங்களின் அபரிமிதமான வளர்ச்சி  பெண்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு அதிகரித்து வரும் துன்புறுத்தல் மற்றும் முன்னெப்போதும் இல்லாத கடன் சுமைக்கு வழிவகுத்துள்ளது. இலாப நோக்கத்துடன் செயல்படும் நுண் நிதி நிறுவனங்களின்  அபரிமிதமான வளர்ச்சி,  85 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட பெண்களை கடன் பொறிகளுக்குள் தள்ளி, அவர்களின் சேமிப்புகளை ஆபத்தில் ஆழ்த்துகிறது. அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, அதிக வேலையின்மை மற்றும் வாழ்வாதார வாய்ப்புகள் இல்லாமை ஆகியவை,  பெண்களின் துயரத்தை மேலும் அதிகரித்துள்ளது. ஆயிரக்கணக்கான பெண்கள் கடன் சுழலில் சிக்கியுள்ளனர். நுண் நிதி நிறுவனங்கள்  மேற்கொள்ளும் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் சட்டவிரோத முறைகள் பெண்களை தற்கொலைக்குத் தள்ளுகின்றன.

நுண் நிதி நிறுவனங்களுடைய முகவர்களின் இந்த துன்புறுத்தலைத் தடுக்க ஒழுங்குமுறைச் செயல்பாடு அவசரமாகத் தேவைப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக, மத்திய அரசாங்கத்தின் வங்கித்துறையை தனியார் மயமாக்குவதற்கான முயற்சியில், சிறு நிதித் துறை தாராளமயமாக்கப்பட்டுள்ளது.  பொதுத்துறை மற்றும் கூட்டுறவு வங்கிகளிடமிருந்து 8-11 சதவீத வட்டிக்கு பெறக்கூடிய கடன்களுடன் ஒப்பிடும்போது, நுண்கடன் நிறுவனங்களில் 22-26 சதவீத அதிக வட்டிக்கு ஆளாக்கப்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும்  இது கடன் வசூல் தொடர்பாக பெண்களுக்கு மேலும் துன்பத்தை ஏற்படுத்தும். எனவே, தனியார் கடன் வழங்குபவர்களுக்கு அதிகபட்சமாக 12 சதவீத எளிய வட்டி விகிதமாக வரம்பு நிர்ணயிக்கப்பட வேண்டும். இருப்பினும், ரிசர்வ் வங்கி பொதுத்துறை வங்கிகள், பிராந்திய கிராமப்புற வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் ஆகியவற்றிற்கு 4 விழுக்காடு (அரசு மானியத்துடன்) முதல் விழுக்காடு வரை முன்னுரிமை துறை கடனளிப்பு விகிதத்தில் நுண் நிதி கடன்களை தாராளமாக வழங்க அறிவுறுத்த வேண்டும்.

சுய உதவிக்குழுக்களுக்கு ஆண்டுக்கு 4 விழுக்காடு வட்டி விகிதத்தில் கடன்கள் வழங்கப்பட வேண்டும். கொரொனா பெருந்தொற்றின் தாக்கம் மற்றும் கடுமையான வேலையின்மையால் ஏற்படும் தற்போதைய பொருளாதார நெருக்கடியின் விளைவாக, பெண் சுய உதவிக்குழுக்கள் (வங்கி அல்லாத நிதி நிறுவனம்)  மற்றும் நுண்நிதி வங்கிகளுக்கு தற்போதுள்ள நிலுவைத் தொகைக்கு வட்டி முழுமையாக தள்ளுபடி செய்யப்பட வேண்டும்.  முன்னுரிமை அடிப்படையில் கடன் வழங்கும் விதிமுறைகளை மறுசீரமைப்பு செய்து, 30 விழுக்காடு கடன்களை நேரடியாக மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வழங்க வேண்டும். 

நுண் மற்றும் சிறு தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் 10 லட்ச ரூபாய் வரையிலான பிணை இல்லாத கடன்களில் குறைந்தபட்சம் 30 சதவீத கடன்களை பெண்களுக்கு ஒதுக்க வேண்டும்.   நுண் நிதி நிறுவனங்களால் துன்புறுத்தல் சம்பந்தப்பட்ட வழக்குகளைப் பெறவும், அவற்றை தீர்ப்பதற்கும், அனைத்து மாநில, மாவட்ட மையங்களிலும் ஒரு  அமைப்பை உருவாக்க வேண்டும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News