மாணவிகள் பாதுகாப்பு கேள்விக்குறி - டாஸ்மாக் திறக்க எதிர்ப்பு
விராலிமலை அருகே காரடைக்கன்பட்டி பகுதியில் அமைக்கப்படும் டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றவேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விராலிமலை தாலுகா ராஜாளிப்பட்டி ஊராட்சி காரடைக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த மக்கள் நேற்று காலை தாலுகா அலுவலகத்துக்கு வந்து தாசில்தாரை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியதாவது காரடைக்கன்பட்டி கிராமத்தில் சுமார் 300 குடும்பங்கள் உள்ளன இப்பகுதி மாணவர்கள் அருகில் உள்ள கவரப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். இந்தநிலையில் காரடைக்கன்பட்டி ஒட்டன் காட்டுப்பட்டி சாலைக்கு மிக அருகில் அரசு மதுபான கடை திறப்பதற்கான கட்டட வேலை நடந்து வருகிறது.
இந்த கடை வழியாக தான் தினந்தோறும் மாணவர்கள் பள்ளிக்கு, பெண்கள் கூலி வேலைக்கு செல்ல வேண்டும். மாலை நேரங்களில் பள்ளி சிறப்பு வகுப்புகள் முடிந்து மாணவிகள் வருவர். மதுபான கடை திறக்கப்பட்டால் மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பு இல்லாமல், கல்வியை பாதியிலேயே நிறுத்தும் சூழ்நிலை ஏற்படும்.கூலி வேலைக்கு செல்லும் பெண்களுக்கு போதிய பாதுகாப்பு இருக்காது. மது அருந்துவோர் குற்ற செயல்களில் ஈடுபடவும், வாகன விபத்து மற்றும் சட்டவிரோத செயலில் ஈடுபடவும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. எனவே, எங்கள் பகுதியில் அமையவிருக்கும் மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது...