தொழிலாளிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை
திருப்பூரில் தொழிலாளிக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை, ரூ. 1 லட்சத்து ஆயிரம் அபராதம் விதித்து தீர்பளித்துள்ளது.;
தொழிலாளிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை
தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியை சேர்ந்தவர் பால்பாண்டி(44). இவர் திருப்பூரில் தங்கி பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர் லட்சுமிநகரில் உள்ள தங்கும் விடுதியில் தங்கியிருந்தார். கடந்த 2020-ம் ஆண்டு விடுதிக்கு சென்றபோது, தங்கும் விடுதியில் பணியில் இருந்த ரங்கநாயகி(65) என்பவருடன் பால்பாண்டிக்கு தகராறு ஏற்பட்டுள்ளது. கோபத்தில் பால்பாண்டி, ரங்கநாயகியை தள்ளிவிட்டுள்ளார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு ரங்கநாயகி திரும்பினார். பின்பு ஒருவாரம் கழித்து தலை வலிப்பதாக கூறி கோவை மருத்துவக்கல்லூரியில் சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதுதொடர்பாக வடக்கு போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து பால்பாண்டியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. கோபத்தில் தள்ளி விட்டதில் மரணம் ஏற்பட்டதால் விபத்து மரணம் குற்றத்துக்காக பால்பாண்டிக்கு 3 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.1 லட்சத்து ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி ஸ்ரீதர் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வக்கீல் ஜமீலா பானு ஆஜராகி வாதாடினார்.